குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, February 14, 2018

மஹாசிவராத்திரியும் கடவுளும்

கடந்த வருடம் மஹாசிவராத்திரி அன்றைக்கு மாண்புமிகு பாரதத்தின் பிரதமர் வந்ததால் எழுந்த அனர்த்தங்களைப் பதிவு செய்திருந்தேன்.

இணைப்பினைப் படித்துப் பாருங்கள்.


இந்த வருடமும் துணை ஜனாதிபதி வருகிறார்கள் என்றுப் பேசிக் கொண்டார்கள். ஆகவே எனது டூவிலரிலேயே முட்டம் சென்று வழக்கம் போல அபிஷேகத்துக்கு கரும்புச்சாறு கொடுத்து விட்டு அப்படியே குரு நாதரையும் தரிசித்து வரலாமென்று சென்றேன். வழி எங்கும் காவல்துறையினர் நின்றிருந்தனர். 

நமக்கெல்லாம் மஹாசிவராத்திரி என்பது ஒரு விழா. ஆனால் காவல்துறையினருக்கு அது தண்டனையாக மாறிப்போன வினோதம் ஈஷாவினால் நடந்து கொண்டிருக்கிறது வருடா வருடம்.  பத்து நிமிடம் வெயிலில் நின்றாலோ கொதித்து மண்டை காய்கிறது. அவர்கள் படும்பாட்டை நினைத்தாலே நமக்கு டென்ஷன் வருகிறது. அந்தச் சூட்டிலும் நின்று கத்திக் கொண்டிருந்தார்கள். வேறு வழி? எரிச்சல் வரும் போது கோபமும் தானாக வந்துவிடும். டிராபிக்கை மிகச் சாதுரியமாக சமாளித்தார்கள். ஜக்கி இருக்கும் வரை ஈஷா ஆட்டம் நடக்கும். நடக்கட்டும். அது அவர் பாடு. என்ன ஒன்று பூண்டி கோவிலுக்குச் செல்பவர்களை தடுக்கின்றார்கள். இவர்களை வழிபாடு நிகழ்ச்சி நடத்த வேண்டாமென்று எவரும் சொல்லவில்லை. ஆனால் பிறரின் உரிமையில் தலையிடுவது சரியில்லை. ஏதாவது வழி பிறக்கும். 

முட்டம் சிவன் கோவிலுக்குச் சென்றால் அங்கு ஒரு குருவியைக் கூட காணவில்லை. அர்ச்சகர் தான் உட்கார்ந்திருந்தார். சிவபெருமானும், முத்துவாளியம்மனும் ஒரு பூ அலங்காரம் கூட இல்லாமல் இருந்தனர். இந்து அறநிலையத்துறையினர் எப்போது போர்டு மாட்டினார்களோ அப்போதிலிருந்தே இந்தக் கதைதான்.  எப்போதும் பத்து ஆட்களாவது இருப்பார்கள். இப்போதோ ஒருவரையும் காணவில்லை. கட்டளைத்தார்களும், பக்தர்களும் கொடுக்கும் பணமெல்லாம் எங்கே போகின்றது என்று தெரியவில்லை. கொடுமையாக இருந்தது. அடியேன் வாங்கிச் சென்ற இரண்டு முழம் கதம்பத்தை முட்டம் நாகேஸ்வரருக்கும், ஒரு முழம் மல்லிகையை முத்துவாளியம்மனுக்குப் போட்டு விட்டு வணங்கி விட்டு முள்ளங்காடு கிளம்பினேன். 


(முத்துவாளியம்மனும், நாகேஸ்வரரும்)

செம்மேட்டில் சாலையை மறித்தார்கள். வழி எங்கும் காவல்துறையினர். நான் செல்லும் போது கார்கள் அதிகமில்லை. ஆஸ்ரமம் சென்று குரு நாதரின் ஜீவசமாதியில் அமைதியாக உட்கார்ந்திருந்து விட்டு வீட்டுக்குக் கிளம்பினேன்.

வரும் வழியில் ஒரு கிழவி பசியோடு செல்வதைப் பார்த்தேன். மனசு கேட்கவில்லை.  அருகில் சென்று,”ஏதாவது சாப்பிடுகிறாயா பாட்டி?” என்று விசாரித்தேன்.

”பசிக்குது, காசு கொடு, சாங்காலமா ஏதாவது வாங்கிச் சாப்பிட்டுகிறேன்” என்றது அது.

ஒரே ஒரு பையனாம். கணவர் இருபத்தாறு வருஷத்துக்கு முன்னே இறந்து போனாராம். பையனை பதினொன்னாம் வகுப்பு வரை படிக்க வச்சு வேலை வாங்கிக் கொடுத்துச்சாம். கல்யாணம் கட்டி வச்சதுக்கு அப்புறம் வீட்டுக்கு வந்த மகாலட்சுமி இந்த அம்மாவை விரட்டி விட்டுடுச்சாம்.  பேரன்கள் இரண்டு பேராம். தெருவில நின்னு பிச்சை எடுத்துதான் சாப்பிடுதாம். பையன் கண்டுக்கவே மாட்டேங்குறான் என்ற வரலாற்றைச் சொன்னது அது. 

கொஞ்சம் பிஸ்கட்டுகளும், கொஞ்சம் பணமும் கொடுத்து விட்டு, ”உம்பேரன்ன பாட்டி” என்றேன்.

“வள்ளியம்மா, வள்ளிப்பாட்டி” என்றது பெருமை பொங்க.

”அது அப்பா எவ்ளோ சந்தோஷமாக அந்தப் பாட்டிக்கு வள்ளின்னு பெயர் வைத்திருப்பார். அதுவோட அம்மா வள்ளி, வள்ளின்னு வாய் கொள்ளாம அழைச்சிக்கிட்டே இருந்திருப்பாங்க அல்லவா?” என்று மனைவியிடம் கேட்டுக் கொண்டே வந்தேன்.

”சும்மா தொனதொனன்னு பேசிக்கிட்டே வராதீங்க. ரோட்டைப் பாத்து வண்டி ஓட்டுங்க” என்றார் மனைவி.

என் வாய் மூடிக் கொண்டது. ஆனால் மனசு?????

இரவில் டிவியில் பார்த்தேன். ஈஷாவில் ஆண்களும் பெண்களும் குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். நாளை இவர்களில் எத்தனை பேர்....??? என்னத்தைச் சொல்ல....! நல்லா இருக்கட்டும் எல்லோரும்.....!

குறிப்பு: 11 டிகிரி அட்ச ரேகையில் அமைந்திருக்கும் கோவில்கள் எல்லாம் மனிதப் பிரச்சினைகளுக்குத் தீர்வு தருமென்று தினமலரில் முதல் பக்கத்தில் ஜக்கி வாசுதேவ் சொன்னதாகச் செய்தி வந்திருந்தது. தினமலர் வகையறாக்கள் ஈஷா பக்கம் அதிகம் தென்படுவார்கள் போல. ஈஷாவில் அம்மணிகள் அதிகமாக இருக்கின்றார்கள். அதிலும் மாமிங்க ஹீரோயின்கள் ரேஞ்சுக்கு இருக்கின்றார்கள்.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.