குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, February 9, 2018

33ம் வருட குருபூஜை அழைப்பு

ஒன்றரை வருட காலம் முட்டம் நாகேஸ்வரர் கோவிலுக்கு வாரம் தோறும் வெள்ளிக்கிழமை அன்று சென்று விடுவேன். காலை எட்டரை மணிக்கு கிளம்பினால் பத்தரை மணிக்கெல்லாம் கோவிலுக்குச் சென்று சேர்ந்து விடுவேன். இடையில் பூளுவபட்டி தாண்டி வரக்கூடிய பாலத்தின் மீது அமர்ந்து பனி மூட்டம் தழுவி நிற்கும் வெள்ளிங்கிரி ஆண்டவன் வசிக்கும் மலையழகை ரசிப்பதுண்டு. பாலத்தின் கீழே பாதம் நனையும்படி தண்ணீர் செல்லும். 

பூளுவப்பட்டியில் ஒரு ஹோட்டலில் வாங்கிய மூன்று சூடான இட்லிகளையும், வாழை இலையின் ஊடே கட்டிய கெட்டிச் சட்னியையும் அந்தப் பாலத்தின் மீது அமர்ந்து விள்ளல் விள்ளலாக சுவைத்து அருந்துவேன். கத்தரி, வெண்டை, மஞ்சள் பயிரிட்டு இருப்பார்கள். அந்தப் பயிர்களின் வாசம் உடல் தழுவிச் செல்லும். இதமான காலை வெயில் உரைக்கவே உரைக்காது. அரை மணி நேரம் அங்கேயே அமர்ந்திருப்பேன். பின்னர் கோவிலுக்குச் செல்வேன். 12 மணி வாக்கில் அர்ச்சகர் பூஜை முடித்து விட, அங்கிருக்கும் பிள்ளையார் கோவிலில் உடல் அசதி தீர உருண்டு விட்டு எழுந்து வண்டியை ஸ்டார்ட் செய்தால் சுமார் இரண்டு மணி அளவில் வீடு வந்து சேர்வேன்.

இது வாடிக்கையான ஒன்றாக இருந்து வந்த நேரத்தில் ஒரு நாள், ‘உன் குரு இன்னும் கொஞ்சம் தூரம் தள்ளி இருக்கிறார், முடிந்தால் கண்டுபிடித்துக் கொள்’ என்றுச் சொன்னார் நண்பர். 

ஒரு மதிய நேரத்தில் அங்கு சென்று சேர்ந்தேன். அமைதி தழுவும் இடம். பறவைகளின் ஒலியும், காற்றசைத்தலால் உண்டாகும் மரக்கிளைகளின் சத்தமும் எழும்பின. அமைதி தழுவும் அற்புதமான இடத்தில் ஜீவசமாதியில் நிஷ்டையில் இருக்கும் குருவினைத் தரிசித்து, என் குருவினையும் தரிசித்து, அன்னம் புசித்து அவரிடமிருந்து விடை பெற்றேன். 

காலம் செல்லச் செல்ல எதிர்கால வாழ்க்கைப் பாதையின் அடைபட்டிருந்த வழிகள் ஒவ்வொன்றும் திறக்க ஆரம்பித்தன. ஆன்மீகம் என்ற பெயரில் அழிச்சாட்டியம் செய்து வரும் அனேக ஆன்மீகப்போலிகளின் முகத்திரைகள் கிழிக்கப்பட்டு உண்மை சொரூபங்கள் தெரிய ஆரம்பித்தன. அந்தப் பயிற்சி, இந்தப் பயிற்சி என்றும், உள்ளொளி அது இதுவென்றும் பிதற்றும் பித்தர்களின் மனப்போக்கினை புரிந்து கொள்ள முடிந்தது. யார் எதற்கு எப்படி ஏன் என்றெல்லாம் நானே புரிந்து கொள்ளும் பக்குவம் கிடைத்தது. குழம்பிய ஆற்று நீர் போன்ற மனது தெள்ளத்தெளிவான ஊற்றோடை போல ஆனது. இருப்பினும் பாசம் என்ற மாயவலைக்குள் இருந்து இன்றும் என்னால் விடுபட முடியவில்லை. ’அதுதான் உங்கள் கடமை’ என்று குரு சொன்னதால் அதற்குள்ளேயே இருக்கிறேன். மனைவி,பிள்ளைகள் அருகில் இருந்தால் தான் மனது ஆழ்ந்த உறக்கத்துக்குச் செல்கிறது. ’சன்னியாச வாழ்க்கையை விட சம்சார வாழ்க்கையே சிறந்தது’ என்பார் குரு. 

இப்படியான வாழ்க்கையில் வருடம் தோறும் குருவிற்காக ஆசிரமம் வரும் அன்பர்களால் நடத்தப்படும் குருபூஜை அன்று மலர்களால் அலங்கரித்து, குருவின் பீடம் ஒளிரும் அந்த நாள், மனதுக்கு ஆன்ம அமைதியை அள்ளித் தரும். 

கட்டுப்பாடுகள் இல்லை, கணக்குகள் இல்லை, வரவு செலவுகள் இல்லை. ஒரே ஒரு கட்டுப்பாடு மட்டுமே அங்குண்டு. “அமைதி”. அமைதி காக்க வேண்டுமென்ற அன்புக் கட்டுப்பாடு மட்டுமே உண்டு. அப்படிச் செல், இப்படிச் செல், பேசாதே, இவ்வளவு கட்டு, இதற்கு இவ்வளவு என்றெல்லாம் விதிகளும் இல்லை. விற்பனையும் இல்லை.

வாழ்வியல் சிக்கல்களில் சிக்கும் மனதுக்கு அமைதி கிடைக்கிறதா? அதுதான் வேண்டும் நமக்கெல்லாம். ஆர்ப்பரித்து, அழுது, புரண்டு கதறும் மனது தெளிவாக அமைதியுறுவதே உண்மையான ஆன்மீகம். அது இங்கு கிடைக்கிறதா என்று அறிவதே ஆன்மீகப் பயிற்சி.

எங்கிருந்தோவெல்லாம் வரும் அன்பர்கள் தங்களின் குருவின் பூஜையன்று, ஒன்று கூடி உணவு சமைத்து தங்கள் குருநாதரைத் தரிசிக்க வருபவர்களின் பசி போக்கிடும் அந்த அற்புதமான ஒன்று கூடல் நிகழ இருக்கிறது. 

வாருங்கள் என் குரு நாதரின் இல்லம் நோக்கி. ஆன்ம அமைதி பெற்று மகிழ அன்புடன் உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்.

இடம் : முள்ளங்காடு சற்குரு ஞானி வெள்ளிங்கிரி ஸ்வாமிகள் ஜீவசமாதி
நாள் : 26.02.2018 - திங்கள் கிழமை

மேலதிக விபரம் தெரிந்து கொள்ள எனது குருவின் கைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும். ஜோதி ஸ்வாமி, 9894815954

முள்ளங்காட்டில் இறங்கி, தென்புறம் செல்லும் தார்ச்சாலையில் 200 மீட்டர் தூரம் நடந்தால் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதி வரும். அங்கிருந்து வலது புறம் திரும்பினால் குருவின் ஜீவசமாதி இருக்கும் இடம் கண்களில் துலங்கும்.

காலை, மதியமும் தீராத நோயான வயிற்றுப் பசி தீர அன்னம் அளிப்பார் குரு. 





0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.