குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, December 18, 2017

பத்து வருடமாய் தூங்காமல் இருக்க இயலுமா?

அதிசயம் என்று நினைக்கவோ, நீங்கள் ஆச்சரியப்படவோ இதை எழுதவில்லை. இப்படி நாமும் இருக்கலாம் என்பதற்காகத்தான் எழுதுகிறேன்.  பத்திரகிரியார் தன் மெய்ஞானப் புலம்பலில் “தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்” என்று புலம்பி இருப்பார். அதென்ன தூங்காமல் தூங்கி சுகம் காண்பது என்று எனக்குள் கேட்டுக் கொண்டிருப்பேன். 

உடலுக்குத் தூக்கம் அவசியம் என்பார்கள். அதை விட மெய்ஞானத் தூக்கத்தில் ஆழ்ந்து தூங்காமல் தூங்குவதற்கும் பயிற்சியும், முறையான வழியும் உண்டு என்கிறார்கள் சித்தர்கள். இதையெல்லாம் பாடல்களாய் எழுதி வைத்து இருக்கிறார்கள். ஆனால் சாட்சி? உண்மையா என்று உணர்வதற்கு ஏதேனும் நிகழ்கால நடப்புகள் இருக்கின்றனவா என்று தெளியாத மனசு கேள்வி கேட்கும். அப்படித்தான் நானும் கேட்டுக் கொண்டிருந்தேன்.

ஒரு யோகியின் கதை என்கிற புத்தகத்தில் யோகேஸ்வரானந்தரின் அனுபவங்களைப் படித்த பிறகு கொஞ்சம் தெளிவு பிறந்தது. என் அறிவு உணர்ந்து கொள்ளாத, அல்லது அறிந்திடாத விஷயங்களை நான் இனி மறுப்பது கூடாது என்ற கொள்கைக்கு வந்தேன். அறிவியல் பூர்வமாக சாத்தியமா என்று இனி ஆராயத் தேவையில்லை என்ற முடிவுக்கும் வந்து விட்டேன். மானிடர்கள் தனக்கு ஒரு விடயம் புரியவில்லை என்பதற்காக உடனடியாக மறுதலித்து கிண்டல் செய்து பேச ஆரம்பித்து விடுவார்கள். அது அவர்களின் அறியாமை. அது அவர்களின் பிரச்சினை. தாம் அறிந்து கொண்டிருப்பது பிறரின் கூற்று என்று கூடத் தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அறிவிலிகள். நாம் உண்ணும் உணவிலிருந்து உடுத்தும் உடை வரை ஒவ்வொன்றும் பிறரால் நமக்கு வழிகாட்டப்பட்டவை அல்லவா? இதில் நம் புத்தி எங்கே போனது? அது இருந்தாலல்லவா நாமெல்லாம் உண்மையான மனிதர்களாக இருப்போம். நாம் பிறரின் பதிப்பு அவ்வளவே. நம் சிந்தனை கூட பிறரால் வழி காட்டப்பட்ட வழியில் மட்டுமே இயங்கும் தன்மை கொண்டவை. தனக்கான சிந்தனை என்று எவரும் சிந்திப்பது இல்லை.நேற்று காலையில் எனக்கு நிரம்பவும் பிடித்த தம்பதிகளுடன் உரையாடிட காலம் கிடைத்தது. இருவரும் ஆன்மீக வழி நின்று சேவைகள் செய்து வருபவர்கள். அந்தத் தம்பதியினரைச் சந்தித்த போது, அப்பெண்மணியின் முகம் தேஜஸ்சில் ஜொலித்தது. அப்படி ஒரு தெளிவு. இதுவரை நான் அந்த முகப் பொலிவை எந்தப் பெண்ணிடமும் பார்த்தது இல்லை. அல்ல, அல்ல பார்க்க வாய்ப்புக் கிடைக்கவில்லை.

அவரின் கணவர் என்னிடம் வருத்தப்பட்டார், ”இவர் தூங்கி பத்து வருடங்களுக்கும் மேல் ஆகிறது” என்று.  அது சாத்தியமா? என்று எனக்குப் புரியவில்லை. அடியேனோ எட்டரை மணிக்கு மேல் தலையாட்டிட ஆரம்பித்து விடுவேன். விடிகாலை நான்குக்கு மேல் படுக்கை முள்ளாகி விடும். விடிகாலையில் துயில் எழுவதும், சீக்கிரமே தூங்கச் செல்வதும் எனக்கு வாடிக்கையாகி விட்டது. அந்த முகத்தில் ஒரு சிறு கரு வளையமோ அல்லது அயர்ச்சியோ அல்லது சோர்வோ இல்லை. துடைத்து வைத்தக் குத்து விளக்காக இருந்தார் அவர். அதெப்படி பத்து வருடமாய் தூங்காமல் இருக்க இயலும்? என்றொரு கேள்வி எழ, அவர்களை அழைத்துக் கொண்டு குருநாதரைத் தேடிப் புறப்பட்டோம்.

ஆழ்ந்த தெய்வபக்தி கொண்ட தம்பதிகளின் சரியான நேரச் சேர்க்கையினால் பூமிக்கு வந்திருக்கிறார் அந்தப் பெண்மணி என்று விரித்துரைத்தார் ஜோதி சாமி என்னிடம் தனியாக.

காய்ஞ்ச மாடு கம்மங்கொல்லையில் விழுவது போன்று இல்லறத்தில் ஈடுபடுவதினால் தான் வாரிசுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாகப் போய் விடுகின்றன ஆண்டவனே என்றார். அவர் தூங்க வேண்டிய அவசியமே இல்லை. அவ்வாறு அவர் தூங்க ஆரம்பித்தால் பின்னர் எழவே மாட்டார் என்று அவரின் கணவரிடம் சொன்னார். ஆகவே வருத்தமோ அல்லது கோபமோ பட வேண்டாம் என்று கனிவுடன் அறிவுறுத்தினார். இருவருக்கும் நிரம்பவும் மகிழ்ச்சி. பத்து வருடங்களாக மனதுக்குள் பாரத்தோடு இருந்தவர்களுக்கு அது ஒரு நோய் அல்ல என்பது புரிந்ததும் மகிழ்ச்சியில் திளைத்தார்கள். 

அலோபதி மருத்துவர்கள் இதற்கு பல பெயர்களைச் சூட்டுவார்கள். ஒரு யோகியின் கதை புத்தகத்தில் காற்றை மட்டும் சுவாசித்துக் கொண்டு சாப்பிடாமல் இருந்தவரின் புகைப்படம் இருக்கிறது. அது சாத்தியமா என்று அறிவியலால் நிரூபிக்க முடியாது.

தம்பதிகள் இல்லறத்தில் ஈடுபடவும் நேரம் காலங்கள் உள்ளன. ஆனால் அதையெல்லாம் நாம் பின்பற்றுவதில்லை என்று சொன்னார் சாமி. உடனே ஜோசியக்காரர்களிடம் சென்று முதலிரவுக்கு நேரம் குறித்தால் போதுமா என்று உங்கள் மனசு கேட்க ஆரம்பிக்கும். அந்த நேரம் அல்ல இது. சாமி என்னிடம் கூறியது வேறு. இனி அது எனக்குப் பயன்படாது என்பதாலும் குழந்தைகளுக்கு ஆதர்ஷ மனிதனாய் இருக்க வேண்டும் என்கிறதாலும் அதிகம் கேட்கவில்லை.

போன வாரம் என்று நினைக்கிறேன். சாமியிடம் பேசிக் கொண்டிருந்த போது ”700 வருடங்களுக்கும் மேல் வாழ வழி இருக்கிறது ஆண்டவனே” என்றார்.  அதற்குரிய எளிய வழி முறைகளையும் என்னிடம் எடுத்துரைத்தார். எனக்கு அதுவும் தேவைப்படாது. இந்த உடலை வைத்துக் கொண்டு 1000 வருடங்கள் வாழ்ந்து என்ன கிழிக்கப் போகிறோம், போதுமடா சாமி, என்றைக்கு விடுதலை கிடைக்கிறதோ அன்றைக்கு மகிழ்வாய் உடலை உகுத்திட வேண்டுமென்று எண்ணமுள்ளதால் (உங்களுக்கும் அப்படித்தான் இருக்கும் அல்லவா?) அவர் சொன்ன எளிய வழிமுறையை இங்கு எழுதிடவில்லை.

ஒரு ஹிட்லர் 60 வருடம் வாழ்ந்ததிற்கே இத்தனை கொலைகள் செய்தார். இன்னும் 1000 வருடங்கள் வாழ்ந்தால் என்ன ஆகும்? என்று நினைத்தாலே நடுக்கமெடுக்கிறது. ஆகவே கலிகாலத்தில் விதிக்கப்பட்டது எதுவோ அது  அப்படியே நடக்கட்டும்.

வாழ்க வளமுடன் !

1 comments:

ராஜி said...

எதும் நடக்கும். எல்லாம் அவனருள்

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.