குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Sunday, August 27, 2017

நன் மனைவி கிடைப்பதரிது

கடந்த வாரம் என்று நினைவு. விஜய் டிவியின் நீயா நானாவில் திருமணத்திற்கு பெண் தேடும் ஆண்களின் பிரச்சினைகள் பற்றி  கோபி நாத் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார். ஆண்களுக்கு பெண்கள் போடும் மிக முக்கியமான கண்டிஷன்கள் தனி வீடு இருக்க வேண்டும், நல்ல வேலையில் இருக்க வேண்டும், அக்கா தங்கைகள் இருக்கக் கூடாது, கடன் இருக்கக் கூடாது, கடன் வாங்கிக் கட்டுபவராகவும் இருக்கக் கூடாது என்பவை. ஒரு சிலர் அமெரிக்காவில் செட்டில் ஆவது வரவேற்கப்படுகிறது. இதெல்லாம் இருந்தால் தான் செலக்‌ஷன் செய்வார்கள். அதன் பிறகு இன்னபிற கண்டிஷன்கள் போடப்படலாம். அது அந்தந்தக் குடும்பத்தைப் பொறுத்தது. 

அந்த விவாதத்தில் பேசிய பெண்களில் ஒருவர் கூட நல்லியல்பு கொண்ட குடும்பத்திலிருந்து ஆண்மகன் இருந்தால் என் மகளைக் கட்டிக் கொடுப்பேன் என்று சொல்லவே இல்லை. கண் இமை முடியை மழித்துக் கொள்வது போல நல்லியல்புகளை மழித்துக் கொண்டு விட்டார்கள் போலும். பணம், பொருள் இருந்தால் தான் ஆண்மகன் என்கிறார்கள். அவனுக்குத்தான் பெண் கொடுப்போம் என்கிறார்கள் பெண்களைப் பெற்றவர்கள்.

சொல்லாமை நோக்கிக் குறிப்பறியும் பண்பிற்றம்
இல்லாளே வந்த விருந்தோம்பிச் - செல்வத்
திடரின்றி ஏமாந் திருந்தாரே நாளும்
கடலுள் துலாம்பண்ணி னார். ( பழமொழி நானூறு - 321 )

கணவனின் முகக் குறிப்பறிந்து  கணவன் நினைத்த காரியத்தை அறிந்து கொள்ளும் மனையாளும், வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்று உபசரித்து அனுப்பும் மனையாளும், செல்வத்துடன் வாழும் மனையாளைக் கொண்டவனே என்றைக்கும் நீங்காத இன்பமுடையவர்கள். இனி வருங்காலத்தில் இப்படி ஒரு நன் மனைவியை எவராலும் அடையவே முடியாது போலும் என்று நினைக்க வைத்தது அன்றைய நீயா நானாவில் பேசிய பெண்களும், பெண்களின் தாயார்களும், தந்தைகளும் பேசிய பேச்சுக்கள்.

பெண் என்பவளுக்கு எது முக்கியம் என்பதை ஒரு பழம் பாடல் விளக்குகிறது.

நாணின்றி ஆகாது பெண்மை நயமிகு
ஊணின்றி ஆகா துயிர்வாழ்க்கை - பேணுங்கால்
கைத்தின்றி ஆகா கருமங்கள் காரிகையாய்
வித்தின்றிச் சம்பிரதம் இல்.  (பழமொழி நானூறு - 327)

இந்தப் பாடலின் விளக்கம்: அறுசுவை உணவின்றி உடலுக்கு உயிர் இல்லை. பணமின்றி காரியங்களைச் செய்ய முடியாது. வித்து இன்றி விளைச்சலும் இருக்க முடியாது. அது போல பெண்களுக்கு நாணம் என்பது முக்கியம். இப்போதையப் பெண்களுக்கு நாணம் என்பது என்னவென்று தெரியுமா என்று தெரியவில்லை.

இத்தகைய நறுங்குணங்கள் கொண்ட பெண்மையைப் பார்ப்பது இனிமேல் அரிதிலும் அரிதாகி விடும் போல. 

அதுவாவது பரவாயில்லை. அந்தக் காலத்தில் சாதாரணமாக ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது நான்கு குழந்தைகளாவது பெற்றுக் கொள்வார்கள். ஆனால் இன்றைக்கோ ஒரு குழந்தைக்கே படாதபாடு பட வேண்டி இருக்கிறது. குழந்தைபெற ஹாஸ்பிட்டல் இருந்தாலே போதும், தாம்பத்யம் வேண்டியதில்லை என்கிறது ஒரு விளம்பரம். ஆண் இல்லாமல் குழந்தைகளையும் பெற்றுக் கொள்ளலாம் என்கிறார்கள். 


ஏரோப்ளேன் ஓட்ட ஆரம்பித்த பெண்கள் இனி ஆண்கள் இல்லாமல் குழந்தைகளையும் பெற்றுக் கொள்வார்கள். ஆண்களின் பாடு இனி திண்டாட்டம் தான் போலும். பெண்கள் ஆண் குழந்தைகளே வேண்டாமென்று முடிவெடுத்தால் மேலும் சிக்கலாகி விடும் போல. என்னவோ நடக்கின்றது. அது நல்லதாக இல்லை என்பது மட்டும் புரிகிறது.

1 comments:

பாவா ஷரீப் said...

//கண் இமை முடியை மழித்துக் கொள்வது போல நல்லியல்புகளை மழித்துக் கொண்டு விட்டார்கள் //

TRUE

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.