குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, August 26, 2017

நிலம் (40) - இந்துவானவர் முஸ்லீமானால் வாரிசுரிமை எவ்வாறு இருக்கும்?

ஒரு வழியாக பிக் பாஸில் பிந்து மாதவியின் தோளில் கை போடும் அளவுக்கு வையாபுரி நெருங்கி விட்டார் அண்ணன்(??) என்கிற உறவில். புறம் பேசும் அளவுக்கு ஈனப்புத்தி உள்ளவர்கள் பிக்பாஸில் இல்லாதிருப்பது நன்றாக இருக்கிறது. குரோதங்களும், துரோகங்களும், கொலைகளும், கெடுமதியும் இல்லாமல் இருக்கும் சூழலைப் பார்க்கும் போதும், அது பற்றிப் படிக்கும் போதும் மனது கொஞ்சம் ஆறுதல் அடைகிறது. 

எனக்கு நீண்ட நாட்களாக ஏன் ஜானகிராமனின் படைப்புகள் சிலாகிக்கப்படுகின்றன என்பது புரியாமல் இருந்தது. பிக்பாஸ் பார்த்த பிறகு அவரின் நாவல்களின் அடிநாதம் புரிபடுகிறது. அவரது படைப்புகளில் உறவுகளின் இடையே உண்டாகும் உணர்ச்சிகளால் விளையும் செயல்களால் நாவல் தொடர்ந்து நடைபெறும். அடிதடி இல்லை, கொலைகள் இல்லை. அவரின் நாவல்கள் மனதை வருடி விட்டுச் செல்லும் தன்மையானவை.

மனிதர்களுக்கு எதுவும் இன்பகரமானதாக இருந்தால் தான் மகிழ்வார்கள். அதை ஜாரா அருமையாக கையாண்டிருக்கிறார். இவரைப் போன்ற நாவலாசிரியர்கள் இப்போது இல்லை என்பது முகத்திலறையும் உண்மை. தற்கால பிரபலமான நாவலாசிரியர் பாலகுமாரனின் நாவல்கள் மனித குலத்துக்கு தவறான வழிகாட்டுதல்களை சொல்லிச் செல்பவை. ஆன்மீகம் என்பது என்னைப் பொறுத்தவரை வியாபாரப் பொருள். அதை தன் நாவல்களில் புகுத்தி ஏற்கனவே குழம்பிக் கிடப்பவர்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறார் பாலகுமாரன். அது ஒரு பக்கம் போகட்டும். 

சமீபத்தில் கேரளாவிலிருந்து ஒரு மலையாளி முஸ்லிம் என்னை அழைத்திருந்தார். கோவையில் தான் வசித்து வந்தாராம். எர்ணாகுளத்தில் செட்டிலாகி விட்டாராம். அவர் சொத்து ஒன்றினைக் கிரையம் பெற இருப்பதாகவும் அது பற்றிய ஆலோசனையை போனிலேயே சொல்ல முடியுமா என்று கேட்டார். பெரும்பாலும் ஆவணங்களைப் படிக்காமல் எதுவும் சொல்வது வழக்கமில்லை என்றாலும் பொதுவான சந்தேகம் என்றால் சொல்கிறேன் என்றும் சொத்தில் வில்லங்கம் இருக்கிறதா என்று கேட்டால் ஆவணங்களைப் படிக்காமல் சொல்ல இயலாது என்றும் சொன்னேன்.

பொதுவான விஷயம் தான் என்றுச் சொல்லி விட்டு தொடர்ந்தார். படியுங்கள், உங்களுக்கு மண்டை காய ஆரம்பித்து விடும்.

அதாவது என்னிடம் போனில் பேசியவர் வீடு ஒன்றினை விலைக்கு வாங்க இருப்பதாகவும், அந்த வீட்டின் உரிமையாளர் இந்துவாக இருந்து முஸ்லீம் மதத்திற்கு மாறி முஸ்லிம் பெண்ணைத் திருமணம் செய்தவரின் மகன் என்றும், அவரின் அப்பா இந்துவாக இருக்கும் போது இந்துப் பெண்ணுடன் திருமணமாகி அவர்களுக்கும் வாரிசுகள் இருக்கின்றார்கள் என்றும் சொன்னார். இந்துப் பெண்ணுக்கு ஒரு ஆண் வாரிசு இருப்பதாகவும் சொன்னார். நான் அந்த வீட்டினைக் கிரையம் பெற விரும்புகிறேன், எனக்குத் தெரிய வேண்டியது இந்துப் பெண்ணுக்குப் பிறந்த பையனுக்கு அந்த வீட்டில் சரி பாதி பாகம் வருமா?  வராதா? எனக் கேட்டார். 

அவர் கேள்வியை வெகு சாதாரணமாகக் கேட்டு விட்டார். எனக்கோ தலை கிறுகிறுக்க ஆரம்பித்தது. சொத்துரிமைச் சட்டம் இந்தியாவில பல அலகுகளாக பிரிந்துள்ளது. இந்து, கிறிஸ்து, முஸ்லிம், பார்சி, காஷ்மீர் என பல பிரிவுகள் இருக்கின்றன. ஏன் பாண்டிச்சேரிக்கும் தனி சட்டம் இருக்கிறது. பெரும்பாலும் இதுவரை இந்துக்கள் சொத்துக்கள் பற்றியே கொஞ்சம் அனுபவம் இருக்கிறது. அது பற்றிய வழக்குகள், விபரங்கள், சட்டங்கள் படித்திருக்கிறேன். 

என் வக்கீல் நண்பர்களைத் தொடர்பு கொண்டேன். ’உனக்கு மட்டும் தான்யா இப்படியெல்லாம் கிளையண்ட் வருவார்கள்’ என்று அலுத்துக் கொண்டனர். ஒரு சிலர் இருவருக்கும் சரிபாகம் என்றுச் சொன்னார்கள். ஒரு சிலர் தெரியாது என்று சொல்லி விட்டார்கள். எனக்கோ அது என்ன விஷயம் என்று அறிந்து கொள்ளும் வரை உறுத்திக் கொண்டிருக்கும். ஆகவே அதற்கான முயற்சிகளை எடுத்தேன். சட்டப்புதையல்களில் தேட ஆரம்பித்தேன். கிடைத்தது அவரின் கேள்விக்கான விடை.

இந்து ஒருவர் இஸ்லாமிய மதத்தைத் தழுவிய பின்பு அந்த மார்க்கத்தின் படி வாழ்ந்து இறந்து உள்ளார் என்றால் அவரின் சொத்துக்கள் முஸ்லிம் சட்டப்படித்தான் பாகம் பிரியும். உங்களது கேள்விக்கு விடை என்னவென்றால் இந்து ஒருவர் இந்துவாக இருக்கும் போது இந்துப் பெண்ணைத் திருமணம் செய்து குழந்தை பெற்றிருக்கிறார். அவர் மட்டும் பின்னால் முஸ்லிமாக மாறி திருமணம் செய்து குழந்தைகள் பெற்றிருக்கிறார். அவர் காலமான பிறகு அந்தச் சொத்துக்கள் முஸ்லிம் பெண்ணுக்கும் அவரது முஸ்லிம் மகனுக்கு மட்டுமே பாத்தியமாகும். இந்துப் பெண்ணுக்குப் பிறந்த மகனுக்கோ அல்லது அவரது இந்து மனைவிக்கோ சொத்தில் பாகம் கிடைக்காது என்றுச் சொன்னேன். முகம்மதியர் பாகப்பிரிவினைச் சட்டத்தில் இயல் 14வது பிரிவில் இந்தக் குறிப்பு இடம் பெற்றிருக்கிறது.

ஒரு வழியாக அவருக்கு விடை கிடைத்து விட்டது. உங்களுக்கும் ஒரு விஷயம் தெரிந்து விட்டது.

தொடர்ந்து இணைந்திருங்கள். பல்வேறு சட்டங்களைப் பற்றி அலசுவோம்.

1 comments:

VaanMegam said...

Can I get more info on Beema land

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.