குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, May 16, 2017

பாசக்காரி

சக மனிதனை எந்த வித பிரதிபலனும் இல்லாமல் நேசிக்கும் மனது இருப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். உறவுகளும் நட்புகளும் எப்போதும் பலனை எதிர்பார்த்து தான் இருக்கும். பலன் இல்லாமல் பிரியமாக இருக்கும் உயிர்கள் இவ்வுலகத்தில் இருக்கவே முடியாது. கொடுத்தால் தான் உறவு. கொடுக்கவில்லை என்றால் பகை தான். 

நாம் ஏன் கடவுளிடம் பக்தியாக இருக்கிறோம் என்று யோசித்துப் பாருங்கள். அவரால் நமக்குப் பலன் இருக்கிறது. ஆகவே கடவுளே, தெய்வமே என்றெல்லாம் அவரைப் போற்ற ஆரம்பித்து விடுகிறோம். ஒரு பேச்சுக்கு என வைத்துக் கொள்ளுங்கள். தவறு செய்தால் அடுத்த நொடியே கடவுள் கொல்கிறார் என்றால் மனித குலம் என்ன செய்திருக்கும்? கடவுளையே கொலை செய்து விட முயற்சிப்பார்கள். தவறு செய்கிறார்கள் என்றுச் சொன்னால் அடுத்த நொடி மனிதனுக்குள் இருக்கும் மிருகம் வெளியில் வந்து விடும். அவரவருக்கு அவரவர் சட்டம். அவர்களுக்குத் தெரிந்ததே நீதி. துரியோதனனுக்கு அவன் செய்தது சரி அல்லவா? 

பெண்களின் மீது எனக்கு எப்போதுமே (வழக்கம்தானே என்று நினைக்காதீர்கள்) காதல் அல்ல அன்பு. அன்பு என்பது வேறு. காதல் என்பது வேறு. உடனே திரைப்படங்களில் எழுதப்படும் வசனங்களை நினைவில் கொண்டு வந்து குழப்பிக் கொள்ளாதீர்கள். எதற்கெடுத்தாலும் சினிமா நினைவில் வந்து விடுவதுதான் தமிழனின் பெரும் பலவீனம். 

திருக்குறளையாவது படித்தால் பிரயோஜனம் உண்டு. சினிமா வசனங்களைப் படிப்பதினால், நினைவில் வைத்துக் கொள்வதால் என்ன ஆகப் போகின்றது. ஒரு பிரயோஜனமும் இல்லை. எனக்கு நிறைய நண்பிகள் உண்டு. எனக்கென்று ராமர் கோடு வைத்திருக்கிறேன். அந்தக் கோட்டினை நான் எப்போதும் தாண்டியதில்லை. ஆனால் ஒரு சில பெண்கள் என் வாழ்வில் கடந்து சென்றவர்கள் சுவடுகளை உருவாக்கிச் சென்றிருக்கின்றார்கள். அதீத அன்பு அல்லது எரிச்சல் அல்லது பொறாமையின் காரணமாக மனதுக்குள் கீறி விட்டுச் சென்று விடுவார்கள். அதன் காரணமாக வெகு ஜாக்கிரதையாக இருப்பேன். பெண்கள் பலன் கருதிதான் பழகுவார்கள் என்று மனம் நினைக்கத் தொடங்கி விட்டது. அதன் காரணமாக பல்வேறு உப சிந்தனைகளும் என்னை அவ்வப்போது ஆட்கொள்ளும். ஒரே ஒரு வீடியோ அதை நொறுக்கித் தள்ளியது. 

நேற்றைக்கு முதல் நாள் மாலையில் யூடியூப்பில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது எதேச்சையாக ஒரு வீடியோ கண்ணில் பட்டது. முதன் முதலாக பார்த்தேன். என்னையும் அறியாமல் கண்களில் கண்ணீர் துளிர்த்துக் கொண்டது. மனையாள் பதறி விட்டாள். என்ன ஆச்சு? என்று கேட்க வீடியோவைக் காட்டினேன். அமைதியாகி விட்டார்.  நீங்களே பாருங்கள். மனசு நெகிழ்ந்து விடும். பாசக்காரர்களாக இருந்தால் உங்கள் கண்ணில் நிச்சயம் கண்ணீர் துளிர்க்கும். 


பாசக்காரி அல்லவா இவள்? இவளின் அன்புக்கு அந்த நொடியில் அவளுக்கு ஏற்பட்ட அந்த அழுகைக்கு விலை ஏதும் உண்டா? அருகில் உட்கார்ந்திருக்கின்றானே ஒருவன் அவன் எவ்வளவு கொடுத்து வைத்தவன்? இப்படி ஒரு அன்பினை எங்காவது நீங்கள் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? பெண்கள் அன்பினால் நிரம்பியவர்கள் அல்லவா?


0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.