குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, December 16, 2016

நாமக்கரும்பின் சுவையும் சேமக்கலத்தின் ஓசையும்

மார்கழி ஒன்றாம் தேதியன்று நான்கரை மணிக்கே தாதர் சேமக்கலத்தினை அடித்துக் கொண்டே சங்கு ஊதிக் கொண்டு வருவார். தூங்கிக் கொண்டிருப்பவர்கள் விழித்தெழுவார்கள். மார்கழி மாதம் தோறும் தினமும் சேமக்கலத்தினை இசைத்துக் கொண்டே சங்கு ஊதிக்கொண்டு பாட்டும் பாடிக்கொண்டு வருவார் தாதர். 

வாசல் தெளித்து, பெருக்கி விட்டு, சில்லிடும் குளிர் நிறைந்த விடிகாலைப் பொழுதில் தாமரைப் பூக்கோலம் போட்டு, மார்கழி முதல் நாள் அன்று பசுஞ்சாணியில் பிள்ளையார் பிடித்து அதன் தலை மீது அருகம்புல் சொருகி, பிள்ளையாருக்கு விபூதி சாற்றி, குங்குமம் இட்டு, சூடம் காட்டி சாமி கும்பிடுவார்கள். அன்றைக்கு சங்கு ஊத வேண்டும். படாதபாடு பட்டு சங்கினை ஊதுவேன். கோலம் முழுமையும் பரங்கிப்பூக்கள் சாணி உருண்டையின் மீது பூத்திருக்கும்.

கோவில்களில் பாடல்கள் ஒலிக்க ஆரம்பிக்கும். பொங்கலுக்கு இன்னும் இத்தனை நாள்கள் இருக்கின்றன என எண்ணிக் கொண்டே ஒவ்வொரு நாளும் கழியும். அறுவடை முடிந்து வயல்களில் உளுந்து விதைத்திருப்பார்கள். தினம் தோறும் புதுப்புதுக் கோலங்கள் போடப்படும். பெரும்பாலும் இந்த காலத்தில் தான் தினமும் கோவிலுக்குச் சென்று வருவார்கள். அடியேன் வீட்டின் வடக்குப் பக்கமாய் இருக்கும் பழைய சிவன் கோவிலில் மழையூர் சதாசிவம் அவர்கள் பாடும் தேவாரப்பாடல்களையும், தெய்வீகப்பாடல்களையும் கேட்பதற்குச் சென்று வருவேன். பொங்கல் தருவார்கள்.

மார்கழியில் பெரும் சோதனை ஒன்று நடக்கும். குளிப்பதற்கு பிச்சனரிக் குளத்துக்குச் செல்வேன். குளிரில் பற்கள் எல்லாம் தந்தியடிக்கும். குளத்துக்குள் செல்வதற்குள் நடு நடுங்கி விடும். ஆனால் உள்ளே சென்று விட்டால் குளத்து தண்ணீர் வெதுவெதுப்பாய் இருக்கும். வெளியில் தான் குளிரடிக்கும். குளித்து முடிக்கையில் வெயில் வந்து விடும். குளித்து விட்டு தலை துவட்டி வரும் போது வெயிலில் காய்ந்து கொண்டே வருவது ஒரு சுகம்.

வீடு வந்து சேர்ந்து சாப்பிட்டு விட்டு பள்ளிக்குச் சென்று வருவேன். மறு நாள் போடப்படும் கோலத்தினை வீட்டில் போட்டுப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். மாலையில் ஐயப்பன் கோவில்களுக்குச் செல்பவர்களின் பஜனைகள் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கும். சூடான சுண்டலும், பொங்கலும் கிடைக்கும். காலையில் சாமி தரிசனம், மாலையில் பஜனைகள் என்று மார்கழி முடியும் வரை சந்தோஷம் கரைபுரண்டோடும். 

வீட்டில் மாடுகளுக்கு புதிய கயிறுகள், நெற்றியில் கட்டும் கயிறுகள் வாங்கி வருவார்கள். பொங்கலுக்கு வீட்டுச் சுவற்றின் மீது சுண்ணாம்பு தடவ கிளிஞ்சல்களை வாங்கி வந்து கணக்கான தண்ணீர் சேர்த்து குழைய வேகவிட்டு மூடி வைப்பார்கள். காவிக்கட்டியை குசவன் கொண்டு வந்து கொடுப்பான். பொங்கல் அன்று வெள்ளையும் காவியும் வரி வரியாக பட்டை தீட்டுவார்கள். கொட்டாச்சியில் செய்த அகப்பையை ஆசாரி கொண்டு வந்து தருவார். வண்ணான், அம்பட்டன் ஆகியோருக்கு வருடக் கூலியாக நெல் அளந்து கொடுப்பார்கள். தாதர் மார்கழி முடிந்ததும் வந்து கூலியை நெல்லாக வாங்கிக் கொள்வார்.

புது அரிசியை அரைத்து புடைத்து பொங்கலுக்கு தயார் செய்வார்கள். வீட்டில் காய்த்திருக்கும் பரங்கிக் காய்களில் பொங்கலுக்கு என்று சில காய்களை ஒதுக்கி வைத்திருப்பார்கள். 

மார்கழி மாதம் முழுவதும் வரப்போகும் பொங்கலுக்கான முன்னேற்பாடுகளாய்தான் தெரியும். வருடத்தில் ஓர் முறையே கிடைக்கும் சர்க்கரைப் பொங்கல், அதனுடன் பதினோறு வகை காய்கறிகள், வெண் பொங்கலோடு கலந்து சாப்பிடப்போகும் சாம்பாரின் சுவைக்காக நாக்கு ஏங்க ஆரம்பிக்கும். அதுமட்டுமல்ல பொங்கலன்று கிடைக்கப்போகும் நாமக் கரும்பின் தித்திப்பு இருக்கிறதே அதைச் சொல்ல வார்த்தைகளே இல்லை.

நாமக்கரும்பு கரு நீல நிறமாய் இருக்கும். இடையே பச்சை வண்ணக் கோடுகள் இருக்கும். இதன் சுவையை அடித்துக் கொள்ள வேறு எந்தக் கரும்புக்கும் தகுதியே இல்லை. பொங்கலன்று மாமா வாங்கி வரும் மஞ்சள் கொத்தின் வாசம் இருக்கிறதே அதன் வாசம் என்னை மயக்கியே விடும்.

மூன்று வாழை இலைகள் போட்டு அதன் மீது பொங்கல், காய்கறிகள், சாம்பார், வாழைப்பழம், தேங்காய் துருவல், வெல்லம், பால், தயிர் சேர்த்து படையலிட்டு சூரியனுக்குப் படைத்து விட்டு சாப்பிடுவது என்பது சிலிர்ப்புத் தரும் புதிய அனுபவம், அடுத்த ஒரு வருடம் காத்திருக்க வேண்டும் மீண்டும் அந்த அனுபவத்தைப் பெறுவதற்கு. விழா அவ்வளவு சீக்கிரம் முடிந்து விட்டதே என ஏங்க வைக்கும் நாள்களாக இருந்தன.

இன்னும் 29 நாட்கள் தான் பொங்கல் வரப்போகின்றது. பனி படர்ந்த விடிகாலைக் குளிரில் மாட்டு சாணத்தின் வாசத்தோடு கோலமிடும் காட்சிகளும், பொங்கலிடும் காட்சிகளும், கோவில்களும், பாடல்களும், இசையும், மாடுகளின் கழுத்தில் இருக்கும் மணிகளின் ஓசைகளும் கண்களுக்குள் விரிகின்றன. 

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.