குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, December 14, 2016

ஆலங்கட்டி மழை

கோவையில் கடுமையான குளிர். உடல் சில்லிடுகிறது. ஆனால் மழைதான் வரமாட்டேன் என்கிறது. நேற்று காலையில் விளாங்குறிச்சிப்பக்கம் நனையும் அளவு தூறல் விழுந்தது. பின்னர் நாள் முழுதும் மேகமூட்டமாய் இருந்தது. அவ்வப்போது வெளியில் வந்து கருக்கி கலைந்து கொண்டிருந்த மேகங்களைப் பார்ப்பதும் பின்னே வீட்டுக்குள் செல்வதுமாய் இருந்தேன். ஆளை அடிக்கும் மழை பெய்தால் நன்றாக இருக்கும். மழை பெய்யும் போது கையை நீட்டிக் கொண்டு சேரில் அமர்ந்து கொள்வதுண்டு. கொட்டும் மழையை ரசிக்க ஒரு மனசு வேண்டும். ஆனால் வானமோ ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்ன பணக்காரன் ஏழை கதை போல ஏமாற்றிக்கொண்டிருந்தது.

அது என்ன கதை என்கின்றீர்களா? சொல்கிறேன்.

ஒரு நரி பெரிய ஆடு ஒன்றுடன் நட்புக் கொண்டதாம். நரி ஆட்டுடன் நட்புக் கொள்ள பெரிய காரணம் ஒன்றும் இல்லை. ஆட்டில் இரண்டு பெரிய கொட்டைகள் தொங்கிக் கொண்டிருப்பதை நரி பார்த்து விட்டது. அது எப்போதாவது வெளியில் விழுந்து விடும். நன்றாகச் சாப்பிடலாம் எனவும் அது எப்போது விழுமோ தெரியாது ஆகவே ஆட்டுடன் நட்புக் கொண்டு அதன் பின்னாலே திரிந்தால் கொட்டைகள் இரண்டும் விழும்போது சாப்பிட்டு விடலாம் என்ற ஆசையில் அதனுடன் சுற்றிக் கொண்டிருந்தது. கொஞ்ச காலம் சுற்றிக் கொண்டிருந்து விட்டு கொட்டைகள் எப்போது விழுவது நாம் எப்போது சாப்பிடுவது? என்று நினைத்துக் கொண்டே ஆட்டுடனான நட்பை விலக்கிக் கொண்டு சென்று விட்டது. ஆட்டின் கொட்டைகள் எப்போது விழுவது எப்போது நரி சாப்பிடுவது? நடக்கின்ற காரியமா? இதே போலத்தான் பணக்காரனுடன் நட்புக் கொள்வதும் அவன் உதவுவான் என்று நினைப்பதும். கதை புரிந்து இருக்கும் என நினைக்கிறேன். மழை இப்போதெல்லாம் பணக்காரன் போலத்தான் நடந்து கொண்டிருக்கிறது. 

மழையும் இதே கணக்காக கோவையில் ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கின்றது. என் நினைவுகளில் ஊடாட தொடங்கின மழைக்கால அனுபவங்கள்.

ஆவணம் கிராமத்தில் கொஞ்சம் வயக்காடுகள் உள்ளன. என் சிறு வயதிலெல்லாம் சைக்கிள் அல்லது மாட்டு வண்டிகளில் தான் பயணம் செய்யலாம். இப்போது இருப்பது போல வீட்டுக்கு இரண்டு மோட்டார் வாகனங்கள் அப்போதெல்லாம் இல்லை. உரம் போட, மருந்து அடிக்க, களை பறிக்க இப்படி சனி அல்லது ஞாயிறுகளில் வேலை இருந்தால் நானும் வண்டியோடு வயலுக்குச் செல்வதுண்டு. பண்ணண்டாம் குளத்திலிருந்து வரும் தண்ணீரை வயலுக்கு அருகில் மடையை உயர்த்தி கட்டினால் தண்ணீர் தேங்கி வயலுக்குள் செல்ல ஆரம்பிக்கும். பயிர்களுக்குள் நடந்தால் கணுக்கால் அளவு தண்ணீர் இருக்க வேண்டும் அப்போதுதான் உரம் போடலாம். மருந்து அடிக்க தண்ணீர் கொஞ்சம் குறைவாக இருக்க வேண்டும். 

வயல் வரப்புகளில் உளுந்துச் செடி இருக்கும். எலிகள் வயலுக்குள் நுழைந்து நெற்கதிர்களைக் கடித்திடா வண்ணம் இந்த உளுந்தங்காய்கள் எலிகளுக்கு உணவாய் மாறும். தப்பிப் பிழைத்தவைகளை ஆய்ந்து வீட்டுக்கு கொண்டு வந்து வெயிலில் காய வைத்து உளுந்தை பிரித்து எடுக்க வேண்டும். கொத்துக் கொத்தாய் கருப்புகலரில் உளுந்தங்காய்கள் இருக்கும். 

வண்டியில் இருந்து இறங்கியதும் வயலோரமாய் செல்லும் கிளை ஆற்றில் கண்கள் சிவக்கச் சிவக்க ஆட்டம் போடுவேன். கரையில் மண் வரப்புச் செய்து அதில் தண்ணீரை வழி மாற்றி பின்னர் ஆற்றில் செல்ல விடுவது எனது வாடிக்கை. மீன் குஞ்சுகள் மாட்டும் என்று எதிர்பார்ப்பேன். ஒன்று கூட சிக்காது. மாமா இருந்தால் நடக்காது. அமைதியாக உட்கார்ந்து கொள்ளவில்லை என்றால் முதுகு பழுத்து விடும். போஸ் இருந்தால் ஆட்டம் அதிகமாகி விடும். அவன் உரம் போட்டு வரும் வரை ஆட்டம்தான். 


இது போன்ற ஏதோ ஒரு நாளில் வயலுக்குச் சென்றிருந்த போது மழை கொட்ட ஆரம்பித்தது. மழையோடு உரமிட்டால் தண்ணீரில் சென்று விடும் என்பதற்காக உரம் போடவில்லை. வண்டியின் கீழே உட்கார்ந்து கொண்டான் போஸ். ஆனால் நானோ ஆற்றுக்குள் அமிழ்ந்து கொண்டேன். தலை மீது சுள் சுள்ளென்று மழை கொட்ட ஆற்று நீர் வெது வெதுப்பாக இருக்க மழையில் நனைந்து கொண்டே தண்ணீருக்குள் அலைந்து கொண்டிருந்தேன். மழை விடுவதாகத் தெரியவில்லை. போஸ் உரத்தை மூட்டையாகக் கட்டி மேலே தார்ப்பாயைச் சுற்றி வைத்து விட்டு வீட்டுக்குப் போகலாம் என்றுச் சொன்னான். பசி வேறு வர வண்டியில் அமர்ந்து கொண்டேன். துண்டைத் தலையின் மீது போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். 

வண்டிமாடுகள் அசைந்து கொண்டிருந்தன. மழையோ கொட்டிக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் மழை நிற்க சில்லென்ற காற்று வீசியது. மீண்டும் படபடவென்று மழை கொட்ட அதனுடன் வெள்ளையாக ஏதோ விழுந்தது. பனிக்கட்டி போல இருந்தது. ஆலங்கட்டி மழைடா என்றான் போஸ். திடு திடுவென கொட்டியது. வலித்தாலும் எடுத்துக் கைகளில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தேன். அவ்வப்போது வாயில் போட்டுக் கொள்வேன். சில்லென்று இருக்கும். மழையில் நனைந்து கொண்டே வீடு வந்து சேர்ந்தோம்.

எட்டாவது படிக்கும் போது ஆலங்கட்டி மழையில் சிக்கியதுண்டு. அதன் பிறகு இதுவரையிலும் ஆலங்கட்டி மழையை நான் பார்க்கவே இல்லை. மழை பெய்கிறது. நானும் நனைகிறேன். ஆனால் ஆலங்கட்டியைத்தான் காணவில்லை. ஆலங்கட்டி என்று ஏன் அழைக்கின்றார்கள் என்று தெரியவில்லை. 

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.