குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, November 23, 2016

கரட்டான்

இன்னும் வங்கிகளில் கூட்டம் நின்று கொண்டிருக்கிறது. சிறுவாட்டுப் பணத்தை எப்படி மாற்றுவது என்று கிழவிகள் கூடிக் கூடி பேசிக் கொண்டிருக்கின்றார்கள். எனக்குத் தெரிந்த பாட்டி சிறுவாட்டுப்பணமாய் பத்தாயிரம் வைத்திருக்கிறது. பாட்டியின் பக்கத்து வீட்டுக்காரர் நூறு ரூபாய்க்கு பத்து ரூபாய் கமிஷன் கேட்க பாட்டிக்கு ஆக்சிலேட்டர் எகிறி இருக்கிறது. பாட்டிக்கு சரியான கோபம் வந்து விட்டது. ஒன்றுமே சொல்லாமல் முறைத்துக் கொண்டு போய் விட்டது. ஆனால் அந்த கமிஷனால் ஏற்பட்ட கோபத்தில் அந்தப் பக்கத்து வீட்டுக்காரர் இப்போது தினமும் திட்டு வாங்கிக் கொண்டிருக்கிறார். பார்க்கும் போதெல்லாம் கரிச்சுக் கொட்டும் பாட்டியைப் பார்த்தாலே எமனைப் பார்ப்பது போல எகிறிக் குதித்தோடிக் கொண்டிருக்கிறார்.

இன்னொரு பக்கத்து வீட்டுக்காரர் பாட்டியிடம் மொத்த காசையும் வாங்கி, அது வைத்திருக்கும் கேஸ் கனெக்‌ஷன் அக்கவுண்டில் போட்டு, பாஸ்புக்கில் பிரிண்ட் எடுத்துக் கொண்டு வந்து பாட்டியிடம் கொடுத்து விட்டார். பாட்டி இன்னொரு பக்கத்து வீட்டுக்காரருக்கு எள்ளுருண்டை, எள்ளடை எல்லாம் செய்து கொண்டு போய் கொடுக்கிறார். அத்தோடு இருந்தாலும் பரவாயில்லை. அந்தப் பக்கத்து வீட்டுக்காரரைப் பற்றி என்னெவெல்லாம் பேச வேண்டுமோ அதையெல்லாம் ஒவ்வொரு தெருவில் இருக்கும் கிழவிகளிடம் பேசிக் கொண்டிருக்கிறது. தீயாய் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது கமிஷன் விஷயம். இவரைப் பார்க்கும் கிழவிகள் எல்லாம் என்னவோ பெரிய குற்றம் செய்து விட்டதாக தங்களுக்குள் அவரைப் பார்த்து ஆள் காட்டி விரலைக் காட்டிப் பேசப் பேச ஆள் என்னவோ மாதிரியாகத் திரிகின்றார்.

யாரிடம் என்ன பேச வேண்டும் என்று தெரிந்து கொண்டு பேச வேண்டும். இல்லையென்றால் இப்படித்தான் ஆகும். பாட்டியின் வாயில் விழுந்து தினம் தினம் வறுபட்டுக் கொண்டிருக்கும் அந்த ஆள் இப்போது சோகமாகத் திரிந்து கொண்டிருக்கின்றாராம். அவரிடம் கொஞ்சம் பெண் தன்மை அதிகம். ஆகையால் அவர் பாட்டியிடம் வாங்கிய பேச்சுக்களை மோடியிடம் திருப்பிக் கொண்டிருக்கிறார். பிரதமர் மோடி படத்தை கண்ணாடியில் ஒட்டி வைத்துக் கொண்டு தினமும் வறுத்து எடுத்துக் கொண்டிருக்கிறாராம். மனைவிக்கோ இது பெரும் பிரச்சினையாக இருக்கிறது. 

இப்படியெல்லாமா மனிதனுக்கு பிரச்சினைகள் எழும்? என்று நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது. யாராவது கிராமத்துப் பாட்டியிடம் முயற்சித்துப் பாருங்களேன்.

இளம் வயதில் நான் செய்த ஒரு செயல் இப்போது என்னை பீதியில் தள்ளி விட்டிருக்கிறது. விஷயம் தெரியாத வயதில் செய்த செயலுக்கெல்லாம் இப்போது பயந்தே ஆக வேண்டிய சூழல். விஷயத்தைச் சொல்கிறேன். கேளுங்கள். 


வீட்டின் வடக்குப் பக்கமாக கிணற்றடி. கிணற்றின் கிழ புறமாக காசாலட்டு மாமரம் விரிந்து பரந்து இருக்கும். தாழ்ந்த கிளைகள் உண்டு. அதில் கயிறு கட்டி ஊஞ்சல் செய்து ஆடிக் கொண்டிருப்பேன். மாமரத்தின் வடபுறமாக வேலி. வேலியில் ஓங்கி வளர்ந்த பனைமரம் ஒன்று இருந்தது. ஒரு நாள் மதியம் போல இருக்கும். ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்தவன் பனைமரத்தின் உச்சியில் பார்க்க அகலமான கண்களுடன் சாம்பல் நிறத்தில் பெரிய பறவை ஒன்றினைப் பார்த்தேன். அதைப் பார்த்ததும் எனக்குள் நடு நெஞ்சில் சிலீர் என்று பயம் ஏற்பட்டது. சரியாக அது தலையை நான்கு புறமும் சுத்த அதைக் கண்டு பயந்து அம்மா அம்மா என்று அலறிக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டேன். அம்மாகிட்டே கேட்டால் அது ஆந்தை என்றார்கள். அன்றிலிருந்து ஆந்தை என்றாலே எனக்கு ஆகாது. இருந்தாலும் யாராவது விளையாடுவதற்கு கூட வந்தால் மாமரத்தின் ஊஞ்சலுக்குச் சென்று விடுவேன். கண் ஒரு பக்கம் பனைமரத்தைப் பார்த்தாலும் உச்சியினைப் பார்க்காது. அவ்ளோ பயம்.


இன்னொரு சம்பவமும் எனக்கு ஏற்பட்டது. காசாலட்டு மாமரத்தில் காய்கள் பிடித்தவுடன் தொரட்டி வைத்து மாங்காய்களைப் பிடுங்கி வைக்கோல் போருக்குள் வைத்து விடுவேன். தினமும் எந்த மாங்காயாவது பழுத்து இருக்கிறதா என்று பார்ப்பேன். மாங்காய் பழுத்து விட்டால் நன்றாக அழுத்திப் பிசைந்து விட மாம்பழம் கொழ கொழவென ஆகி விடும். நுனியில் ஒரு ஓட்டையைப் போட்டு விட்டு உறிஞ்சினால் மாம்பழ ஜூஸ். அடியேன் கண்ட மேனிக்கு மாம்பழத்தைத் தின்பதுண்டு. வீட்டில் வியாபாரிக்கு விற்றது போக மீதமுள்ள மாங்காய்களை வேப்பந்தழையில் போட்டு பழுக்க வைப்பார்கள். அந்தக் கணக்கு வேறு. ஆனால் யாருக்கும் தெரியாமல் நான் கொஞ்சம் மாங்காய்களை வைக்கோல் போருக்குள் ஒளித்து வைத்து சாப்பிடுவதுண்டு. மாம்பழத்தின் ருசி அப்படி. அப்படி ஒரு நாள் பதுக்கி வைத்திருந்த மாங்காய்களை வைக்கோல் போருக்குள் கையை விட்டு பார்க்க ஏதோ தட்டையாக இருந்தது. யாரோ விளையாண்டு விட்டானே என்ற கோபத்தில் அதை இழுத்து வெளியில் போட மல்லாக்க விழுந்தது அந்த வஸ்து. என்ன வஸ்து என்று தெரியாமல் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். அதை குப்புற தூக்கிப் போட்டேன். சிறிது நேரத்தில் அது மெதுவாக நகன்றது. பயத்தில் அம்மா என்று அலற அனைவரும் ஓடி வர பார்த்தால் அது ஆமை. அம்மா என்னைக் கண்ட மேனிக்குத் திட்ட ஒரு வழியாக ஆமையை தீயை வைத்துக் கொன்று குப்பைக் கிடங்கில் புதைத்தார்கள். இனிதான் விஷயமே இருக்கிறது.

(கரட்டான் என்றழைக்கும் ஓணான்)

ஞாயிற்றுக் கிழமைகளில் மாமா பையன் விட்டியன் என்னுடன் விளையாட வந்து விடுவான். அவனுக்கு ஏன் விட்டியன்னு பெயர் வந்துச்சுன்னு தெரியாது. விட்டிப்பயலைக் கூப்பிடு என்றுதான் சொல்வார்கள். நானும் அவனும் ஒன்று சேர்ந்தால் அன்றைக்கு கரட்டானுக்குச் சமாதி என்று அர்த்தம். அவன் கைகாட்டி தோட்டத்து வீட்டில் இருந்து வரும் போதே தென்னை ஓலையின் ஈர்க்கைக் கொண்டு வந்து விடுவான். ஈர்க்கு நரம்பு போலவே இருக்கும். நுனியில் சுறுக்குப் போட்டால் அவ்வளவு எளிதில் கண்ணுக்குப் புலப்படாது. வேலியில் பதுங்கி இருக்கும் கரட்டானைச் சுறுக்குப் போட்டுப் பிடித்து அடித்துக் கொன்று விடுவோம். பின்னர் அதற்கு ஆக வேண்டிய காரியங்களைச் செய்து மண்ணுக்குள் புதைத்தால் தான் இருவருக்கும் விளையாட்டு முடியும்.


பட உதவி சிறுகதைகள் தளம்

இப்படி பல கரட்டான்களைக் கொன்று கொன்று விளையாடிய நாட்கள் எப்போதாவது நினைவுக்கு வந்து செல்லும். கடந்த வாரம் ஒரு நாள் நானும் மனையாளும் கலெக்டர் அலுவலகம் சென்று விட்டு வந்த போது நடு ரோட்டில் கரட்டான் நின்று கொண்டிருந்தது. சற்றே பெரிய கரட்டான் அது. நடு ரோட்டில் தலையைத் தூக்கிக் கொண்டு என்னை முறைத்துக் கொண்டு நின்றது. வண்டியை நிறுத்தி விட்டேன். மனையாள் ஒதுங்கிப் போங்க என்றார். இடது பக்கம் ஒதுங்கினால் இடது பக்கம் வந்தது. வலது பக்கம் திருப்பினால் வலது பக்கம் வந்தது. இது என்னடா கொடுமை என்று நினைத்துக் கொண்டு பின்னாலும் முன்னாலும் பார்த்தால் அந்த நேரம் பார்த்து ஒரு வண்டியும் வரவில்லை. கரட்டான் என்னைத் தடுக்க எனக்கோ பழைய நினைவுகள் வர சிலீரென்று பயமேற்பட்டது. நானும் விட்டிப்பயலும் கொன்ற கரட்டான்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கொண்டு புதிய பிறப்பாக பிறந்து இப்போது நேருக்கு நேராக மோத வந்து விட்டதோ என்று நினைத்தேன். விட்டியனுக்கும் எனக்கும் பாதிப் பங்கு ஆகவே கரட்டானே இருவரையும் ஒன்றாகப் பார்த்து தான் நீ சண்டைக்கு வர வேண்டும், இப்போது சென்று விடு என்று அதைப் பார்த்துச் சொன்னேன். அது அசைவதாகத் தெரியவில்லை. அந்த நேரம் பார்த்து லாரி ஒன்று வர கரட்டான் சாலையோரம் ஒதுங்கியது. விட்டால் போதும் என்று வீடு வந்து சேர்ந்து விட்டேன்.

வீட்டின் வெளியே உட்கார்ந்திருந்த போது வேப்பமரத்தின் மீது ஒரு கரட்டான் உட்கார்ந்து கொண்டு என்னையே பார்ப்பதும் பின்னர் தலையைத் தூக்கி ஆட்டுவதுமாக இருந்தது. விடாது கரட்டான் போல! என நினைத்துக் கொண்டு வீட்டுக்குள் வந்து விட்டேன். இப்போது வேப்பமரத்தைப் பார்க்கும் போதெல்லாம் என் கண்கள் கரட்டானைத் தேடுகின்றன. அதைக் காணவில்லை. என்னை மன்னித்து விட்டதா? என்று தெரியவில்லை.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.