குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, September 15, 2016

தாய்மை உணர்வுக்கு நிகர் வேறு ஏது?

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்ற பழமொழி சொல்லக் கேள்விப்பட்டிருக்கின்றேன். அனுபவ ரீதியில் நான் தகப்பனாக மாறிய பிறகு தான் புரிந்து கொள்ள முடிந்தது. 

ஒரு டிவியில் இறந்து போன தன் குழந்தையின் நினைவாகவே சுடுகாட்டில் குழந்தை புதைக்கப்பட்ட இடத்தில் ஒரு தாய் தினமும் சென்று அழுது புரண்டு கொண்டிருக்கின்றார் என்று டீசர் வெளியிட்டிருந்தார்கள். 

குழந்தையை வயிற்றில் சுமந்து வலியுடன் பெற்றெடுத்து அவஸ்தைகளை அனுபவித்து, நேரம் காலம் பாராது கண் விழித்து, சிறு நீர் கழித்தவுடன் உடை மாற்றி, மலம் கழித்தவுடன் முகம் சுழிக்காது சுத்தம் செய்து கழுவி விட்டு உடைகள் துவைத்து, குளிக்க வைத்து, அழுகையில் அது என்ன அழுகை எனக் கண்டுபிடித்து உணவு ஊட்டி, இரவும் பகலும் ஓயாது பாதுகாத்து வளர்க்கும் தாய்மைக்கு ஈடு இந்த உலகில் ஏது? 

தான் இல்லையென்றால் தன் குழந்தைகளும் இந்த உலகில் துயரப்படும் என்று நினைத்து பல்வேறு பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ளும் ஒரு சிலர் தங்களோடு தங்கள் குழந்தைகளையும் கொன்று தானும் செத்துப் போகின்றார்கள். இது தாய்மை உணர்வின் அதீத உச்சகட்டம்.

அம்மா, அப்பா இல்லாத பல குழந்தைகளை நான் பார்த்திருக்கிறேன். அவர்களுடன் பழகி இருக்கிறேன். அவர்களிடம் கேட்டுப்பாருங்கள். அந்தத் தாய்மை உணர்வின் மகத்துவம் பற்றி. கிடைக்காத அந்த பாசமழையின் அற்புதங்கள் அவர்களின் கண்களின் ஊடாக சோகத்தின் நிழலாகப் படிந்து கிடக்கும். அது அவர்களுக்கு நிரந்தரச் சோகக் குறியீடாகவே இருந்து விடும் அவர்களின் வாழ் நாள் முழுவதும்.

நல்ல ஆரோக்கியமான குழந்தையை வளர்ப்பது என்பது ஒரு விதம் என்றால் மாற்றுத்திறனாளிக் குழந்தைகளை வளர்க்கும் ஒரு தாயின் அர்ப்பணிப்பு அந்த உணர்வின் உண்மையை எந்த வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியும்?

என்னையும் என் தாய் அப்படித்தான் வளர்த்தார். எல்லாக் குழந்தைகளும் ஓடி விளையாடும் போது தன் குழந்தை மட்டும் தவழ்ந்து செல்வதைப்பார்க்கும் என் தாயின் மன நிலை என்னவாக இருந்திருக்கும் என்று நினைக்கையில் அவர் பட்டிருக்கும் மனத்துன்பத்தின் வீச்சினை என்னால் இப்போது புரிந்து கொள்ள முடிகிறது. அவரவர் துன்பம் அவரவருக்கு. ஒருவரின் வலியை இன்னொருவர் புரிந்து கொள்ளவே முடியாது. உதட்டளவில் வேண்டுமானால் துயரப்படுவதைப் போல காட்டலாம். ஆனால் உண்மையில் அது ஒரு நடிப்புச் சுபாவமே.

சமீபத்தில் எனக்குத் தெரிந்த ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவர் வசிக்கும் வீட்டின் கீழ்புறம் ஒரு குடும்பம் இருந்தது. அங்கு ஒரு பெண் குழந்தையைப் பார்த்தேன். இரண்டு கால்களும் சூம்பி இருந்தன. பாதங்கள் வளைந்து இருந்தன. முதுகுத்தண்டு பின்புறமாக வளைந்து இருந்தது. அப்பெண் குழந்தை நடந்தது. நன்கு பேசியது. அதைப் பார்த்ததும் எனக்குள் வலி பரவ ஆரம்பித்தது. சொல்லொண்ணாத் துன்ப உணர்வில் மூழ்க ஆரம்பித்தேன். 

ஆவணம் கிராமத்தில் எனக்குத் தெரிந்த ஒரு ஊனமுற்ற பையன் சாப்பாடு கிடைக்காமல், சரியாக பராமரிப்பு இல்லாமல் இறந்தே போனான். அவனது தாயும் தந்தையும் இருக்கும் வரையில் அவனைப் பாதுகாத்து வந்தனர். ஒருவரில் இருவர் இல்லாமல் போன பிறகு அவன் பிணமானான். அவன் எவ்வளவு வேதனையை அனுபவித்திருப்பான் என்று நினைக்கையில் மீண்டும் மீண்டும் துன்ப உணர்ச்சி மேலிடுகிறது.

அந்தப் பெண் குழந்தையின் தாயைப் பார்த்தேன். அவர் என்னைப் பார்த்தார். அவரிடம் சொன்னேன், உங்கள் குழந்தையை தைரியமான பெண்ணாக வளருங்கள் என்றேன். நிச்சயம் சார் அதை அவளுக்குச் சொல்லிக் கொடுத்து வளர்க்கிறேன் சார் என்று உறுதி கொடுத்தார். அந்தத் தாய் அப்படித்தான் வளர்ப்பார் என்று நம்புகிறேன். 


(தங்கவேல் மாரியப்பன் - பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் பெற்ற சேலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்)

இதோ இந்தியாவின் மானத்தை ஒலிம்பிக்கில் காப்பாற்றியவர்கள் என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளே. வரலாறு சொல்லிக் கொண்டிருக்கும் இனிக் காலம் காலமாக. திறமையும், அர்ப்பணிப்பு மண்டிக்கிடக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு பணிகளைக் கொடுக்கக் கூட இந்த கார்ப்பொரேட் உலகம் தயங்குகிறது. இன்று இந்தியா அவர்களிடத்தில் தலை வணங்குகிறது. இந்த வீரர்களின் தாய்கள் தான் உண்மையில் பாராட்டப்பட வேண்டியவர்கள். அவர்களின் தியாக உணர்வுதான் அவ்வீரர்களை வெற்றி பெற வைத்துள்ளது.

தாய்மை என்பது சொல்லிப் புரிந்து கொள்ள முடியாத வார்த்தை. அதை அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும் அதன் தன்மை.

இந்தியா மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு சித்ரவதைக்கூடமாகவே இருக்கிறது. பள்ளிகளும், கல்லூரிகளும், அரசு அமைப்புகளும் கொடூரங்களைச் செய்து வருகின்றன. 

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் எனக்கு டேட்டா எண்ட்ரி வேலை கிடைத்து இண்டர்வியூக்கு வரச் சொல்லி இருந்தார்கள். அங்கு சென்றேன். கலெக்டரிடம் ஆர்டரைக்காட்டினேன். கலெக்டர் சம்பந்தப்பட்ட அதிகாரியை அழைத்து பணி ஆர்டர் கொடுக்கச் சொன்னார். அதற்கு அவர் யாரிடமோ காசை பெற்றுக் கொண்டு வேறொருவருக்கு பணி கொடுத்து விட்டதாகக் கூசாமல் சொன்னார். ஊனமுற்ற அடையாள அட்டை வாங்கச் சென்றேன். என்னிடமும் பணம் கேட்டார்கள். உங்கள் அடையாள அட்டையும் வேண்டாம் உங்கள் உதவியும் வேண்டாம் என்று கரூர் கலெக்டர் அலுவலகத்தில் அனைவரின் முன்பும் சத்தமிட்டு அப்ளிகேஷனை கிழித்து போட்டு விட்டு வந்தேன்.

ட்ரெயினில் செல்வதற்கு ஊனமுற்றோர் பாஸ் வைத்திருக்கிறேன். டிக்கெட் பதிவு செய்யச் சென்றால் கோவையிலிருந்த டிக்கெட் முன்பதிவு கவுண்டரில் இருந்த பெண் எரிச்சலடைகிறார். அதைக் கொண்டா இதைக் கொண்டா என்று விரட்டுகிறார் என்றார் என் மனையாள். அவ்வளவு கடுப்பாக இருக்கிறது அந்தப் பெண்ணுக்கு.

வெற்றியடைந்த மாற்றுத்திறனாளிகளைப் பாரட்டக்கூட இவர்களுக்கு எந்த விதத் தகுதியும் இல்லை. வெட்கப்பட வேண்டிய விஷயம். ஆனால் மனம் கூசாமல் பாராட்டுகின்றார்கள். மாற்றுத் திறனாளிகளுக்கு பணிகள் கொடுக்க மறுக்கும் தனியார் துறைகளும், ஒதுக்கும் அரசும் இன்று அவர்கள் பெற்ற பதக்கங்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவிக்கின்றன. அசிங்க உணர்வு கொஞ்சம் கூட இல்லை. மாற்றுத்திறனாளிகளை வாழவே விடாத சமூகமும், அரசாங்கமும் அவர்களின் வெற்றிக்கு பாராட்டுத் தெரிவிப்பதற்கு இங்கு யாருக்கும் எந்த உரிமையும் இல்லை அதற்கான தகுதியும் இல்லை.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.