குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, June 30, 2016

நிலம்(21) - சொத்தின் தன்மையும் வாரிசுகளின் பாகமும்

சமீபத்தில் ஒரு ஜர்னலில் ஒரு வழக்கினைப் படித்தேன். வெகு சுவாரசியமான வழக்கு தான் அது. சொத்தில் பாகம் குறித்த ஒரு முக்கியமான அவசியமான அனைத்து வழக்குகளுக்கும் முன்னுதாரமான வழக்கு தான் இது.

இனி வழக்கு விபரத்தினைப் பார்ப்போம். அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது. கொஞ்சம் கவனமாகப் படியுங்கள்.

ஒரு கணவன் தன் மனைவியின் பெயரில் சொத்தினை வாங்குகிறார். அந்தச் சொத்து அவர்களது அனுபோகத்தில் இருந்து வருகிறது. திடீரென கணவன் இறந்து விடுகிறார். மனைவியானவள் தன் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். குழந்தைகள் பெரியவர்கள் ஆனவுடன் தன் குழந்தைகளில் ஒரே ஒரு குழந்தைக்கு மட்டும் சொத்தினை எழுதி வைக்கிறார். விஷயம் அவ்வளவுதான். இது ஒன்றும் தவறே இல்லை. அந்தப் பெண் தான் கிரையம் பெற்ற சொத்தினை யாருக்கு வேண்டுமானாலும் கிரையமோ தானமோ எழுதி வைக்க உரிமை கொண்டவர் ஆகிறார். அந்தப் பெண்ணின் இதர வாரிசுகளுக்குச் சொத்தில் உரிமை இல்லை. அவர்களால் அந்தச் சொத்தில் பாகம் கேட்க முடியாது.

இதுவரையிலும் நான் சொல்லி இருப்பது உங்களுக்குப் புரிந்து இருக்கும் என நினைக்கிறேன். ஒருவரின் சுய சம்பாத்தியத்தில் வாங்கப்பட்ட சொத்தினை அவர் யாருக்கு வேண்டுமானாலும் எழுதி வைக்கலாம். அது அவரின் உரிமை.

ஆனால் மேற்குறிப்பிட்ட சொத்தில் அந்தப் பெண்ணின் இதர வாரிசுகள் பாகம் பெற்றனர். எப்படி? 

கணவன் தனது மூதாதையர் சொத்தினை விற்று கிடைத்த பணத்தைக் கொண்டுதான் தன் மனைவியின் பெயரில் சொத்துக்களைக் கிரையம் பெற்றிருக்கிறார் என்பதனை அந்தப் பெண்ணின் இதர வாரிசுகள் கோர்ட்டில் தகுந்த ஆவணங்களுடன் நிரூபித்தார்கள். விஷயம் முடிந்தது.

இனி நீங்கள் சொத்து வாங்கும் போது கிரையம் பெற்ற சொத்துக்கள் வாங்க எப்படி பணம் வந்திருக்கும் என்றொரு கேள்வியை அவசியம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் அது வெகுமுக்கியமான விஷயம் என்பது உங்களுக்கு இப்போது தெரிந்திருக்கும்.

உங்களுக்காக ஒரு குறிப்பு :

இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956 என்பது இந்துக்களின் சொத்தில் பாகம் பிரிவதைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கின்றது. 

இந்து வாரிசுரிமைச் சட்டம் முகம்மதியர், கிறிஸ்தவர், பார்சி அல்லாத இந்தியாவிலுள்ள மற்ற அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும் மற்றும் ஒரு நாத்திகவாதிக்கும் கூட பொருந்தும்.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.