குரு வாழ்க ! குருவே துணை !!

அழைக்க : 9600577755 - இமெயில் : covaimthangavel@gmail.com

Friday, May 6, 2016

மனிதனின் இரண்டு முகங்களும் ஒரு ஜென் கதையும்

ஒரு மதுச்சாலையில் ஒருவன்
தனக்குள்ள உறுதியான வைராக்கியம் பற்றி
பெருமையடித்துக் கொண்டான் :

“மதுவை இனித் தொடவே மாட்டேன்” என்றான்.

ஆனால் அன்று மாலையே
அங்கே வந்து விட்டான்.

எல்லோரும் கேட்க, இப்படி உரக்கச் சொன்னான்:

“நான் என் மன வைராக்கியத்தை விடப் பலமானவன்!
நான் முழுதும் போராடி என் வைராக்கியத்தைத்
தோல்வியடைச் செய்து விட்டேன்.
இரண்டு மடங்கு மதுவைக் கொடு!”

(நன்றி : ஓஷோவின் ஒரு கோப்பைத் தேநீர் )

இதை ஓஷோ ஒரு மனிதனின் சுய வஞ்சனை என்கிறார். எந்த ஒரு செயலையும் அவன் நியாயப்படுத்திக் கொள்கிறான் என்கிறார் ஓஷோ.

* * *

அடுத்து ஒரு ஜென் கதை.  இந்தக் கதை உங்களுக்குப் புரிந்து விட்டால் !



கடலில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சின்ன மீனுக்கு நீண்ட நாளாக ஒரு சந்தேகம்.

’கடல், கடல் என்று பேசிக் கொள்கிறார்களே, அப்படியென்றால் என்ன?’ என்பது தான் அந்தச் சந்தேகம். அதைத் தெளிவுபடுத்திக் கொள்ள ஒரு பெரிய மீனிடம் சென்று,

“கடல் என்றால் என்ன? அது எங்கே இருக்கிறது? எப்படி இருக்கிறது?” என்று கேட்டது.

“அதுதான் உன்னைச் சூழ்ந்திருக்கிறது. அதற்குள் தான் நீ இருக்கிறாய்!” என்றது பெரிய மீன்.

“ஆனால் அது எனக்குத் தெரியவில்லையே!” என்றது சின்ன மீன்.

“நீ அதற்குள் இருப்பதால் தான் உனக்குத் தெரியவில்லை. நீ பிறந்ததும் கடலில். வாழ்ந்து கொண்டிருப்பதும் கடலில். உன்னைச் சுற்றி இருப்பதும் கடல். உனக்குள் இருப்பதும் கடல். உனது தோலைப் போல் அது உன்னை விட்டு நீங்காமல் சூழ்ந்திருக்கிறது. நீ பிறந்து வாழ்ந்து மறையப் போவதும் இந்தக் கடலில் தான். அதற்குள் இருப்பதால் அது தெரியவில்லை” என்றது பெரிய மீன்.

* * *

இந்த ஜென் கதை புரிந்து விட்டால் வாழ்வில் படும் துயரங்களில் இருந்து மனிதன் விடுதலை பெற்று விடுவான். புரியவில்லை என்றால் அடுத்து ஒரு அருமையான கதையொன்றினை வெளியிடப் போகிறேன். அந்தக் கதை சொல்லும் உங்களுக்கு ஆயிரமாயிரம் அர்த்தங்கள்.

ஜென் கதைக்கு முன்பு இருக்கும் கவிதை உங்களின் மனதை நிச்சயம் கீறி விட்டிருக்கும். சுய நிந்தனையில் மனிதனை விட மிகவும் உயர்ந்தது எதுவுமே இல்லை என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை. அந்த சுய வஞ்சகத்தன்மையினால் அவன் இழப்பது தன் வாழ்க்கையை என்று அவர் என்றைக்குமே உணருவது இல்லை.

கவிதை மனிதனின் ஒரு முகத்தையும், ஜென் கதை மனிதனின் அறியாமை எனும் முகத்தையும் காட்டுகிறது. இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். 

* * *


0 comments:

Post a Comment