குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, May 3, 2016

நிலம் (18) - அரசு புறம்போக்கு நிலத்திற்கு பட்டா கிடைக்குமா?

மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் 20.02.2015ம் வருடம் வெளியான ஒரு தீர்ப்பு பல்வேறு மக்களிடையே மகிழ்ச்சியை உருவாக்கியது. இந்தியாவில் வீடில்லா ஏழைகளுக்கு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தினாலும் முழுமையான தீர்வு என்பது எப்போது கிடைக்கும் என்று எவராலும் சொல்ல முடியாது. அரசு அறிவிக்கும் வீட்டு திட்டங்களைச் செயல்படுத்தும் தகுதியில் உள்ளவர்களின் சுய நலப் போக்கால் பலருக்கும் வீடு கட்டுவது பெரும் கனவாகவே இருந்து வருகிறது.

மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்போருக்கு வீடு கட்டும் திட்டத்தினை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசு குறைந்த வட்டியில் வீடில்லாதவர்களுக்கு வீடு கட்ட கடனும் அளிக்கிறது. இத்தனை வசதி வாய்ப்பும் இருந்தும் அதைச் செயல்படுத்திட பெரும் பிரயத்தனங்களை மக்கள் செய்ய வேண்டி உள்ளது. அவ்வளவு எளிதில் இவ்வகைத் திட்டத்தினை செயல்படுத்திட முடிவதில்லை. பல்வேறு ஆவணங்கள், அலைச்சல்கள் என்று அன்றாடம் கூலி வேலைக்குச் செல்வோருக்கு சாத்தியமில்லாத திட்டங்களாகத்தான் இவ்வகைத் திட்டங்கள் இருந்து வருகின்றன. 

இந்த நிலையில் ஏதோ ஒரு அரசு புறம்போக்கில் வீடு கட்டி 5 வருடங்களுக்கு மேல் குடியிருந்தால்,  அதை நிரூபிக்கும் வகையில் ஆவணங்கள் இருந்தால் தமிழக அரசின் சட்டத்தில் இடமுண்டு என்று வழக்கு எண். எம்.பி(எம்.டி) 1 / 2015 மற்றும் மேல்முறையீட்டு வழக்கு எண்.டபிள்யூ.பி(எம்.டி)1649/2015 மனுதாரர் வள்ளியம்மாள் தொடர்ந்த வழக்கில் மதுரைக் கிளை உயர் நீதிமன்ற நீதிபதி திரு.பி.ராஜேந்திரன் அவர்கள் தீர்ப்பு வழங்கி இருக்கிறார்.

அதுமட்டுமல்ல அரசு நிலங்களில் வீடு கட்டி குடியிருப்போருக்கு ஒரு முறை வரன்முறை செய்யப்பட்டு, வீட்டு மனை வழங்கும் திட்டத்தில் பல்வேறு மாறுதல் செய்யப்பட்டன. அது தொடர்பாக ஒரு வழக்கும் தொடரப்பட்டது. இருப்பினும் அந்த உத்தரவு 2015ம் வருடம் வரை நீட்டிப்பும் செய்யப்பட்டது. அது பற்றிய அரசாணையை நீங்கள் கீழே படிக்கலாம். ஆகவே அடுத்து ஆட்சிக் கட்டிலில் ஏறும் அரசு ஏதாவது பட்டா வழங்க கால நீட்டிப்புச் செய்தால் புறம்போக்கு நிலங்களில் வீடுகள் கட்டி வசித்து வருவோர் அந்த அரசாணையைப் பயன்படுத்தி தங்கள் வீடுகளுக்கு பட்டா பெற்றுக் கொள்ளவும்.

மேலும் விபரங்களுக்கு என்னை அணுகவும். உதவ முயற்சிக்கிறேன். 








0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.