குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, September 9, 2015

குருவிற்கும் கடவுளுக்கும் என்ன வித்தியாசம்? இறுதிப்பகுதி

மனிதன் ஒரு கோமாளி. நாளை என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. படுத்தவன் பரலோகம் போய் விடுகிறான். துயிலிருந்து நிச்சயம் எழுவோமா என்பதெல்லாம் கேள்விக்குறி. இருப்பினும் என்ன? கோபம், பொறாமை, சூது, வஞ்சகம் அது மட்டுமா இன்னும் என்னென்னவோ வித்தியாசமான எண்ணங்களால் சூழப்பட்டு தன்னை ஒரு அழியாப்பொருளாய் நினைத்துக் கொள்கிறான். அதனால் வருவதும், விளைவதும் தான் கர்மபலன் !

இப்போது விஷயத்துக்கு வந்து விடுகிறேன். உங்களுக்கு ஒரு கதையைச் சொல்ல விரும்புகிறேன். அவசியம் படியுங்கள் !

ஒரு சீடனின் வீட்டுக்கு கடவுளும் சீடனின் குருவும் வருகை தந்தனர். கடவுளையும், குருவினையும் ஒன்றாகப் பார்த்த சீடன் உடனடியாக கடவுளின் அருகில் சென்று அவரின் பாதத்தை தொட்டு வணங்கச் சென்றான்.

உடனே கடவுள் அவனைத் தடுத்து, “முதலில் நீ உன் குருவை வணங்கு” என்றுச் சொன்னார்.

சீடன் குருவினை பணியச் சென்ற போது, “சீடனே,  நான் உன் வீட்டுக்கு கடவுளை அழைத்து வந்திருக்கிறேன், அதனால் நீ கடவுளைத்தான் முதலில் வணங்க வேண்டும்” என்றுச் சொன்னார்.

குருவின் உபதேசத்தைக் கேட்ட சீடன் மீண்டும் கடவுளின் அருகில் சென்று அவர் பாதம் பணிய முயன்றான். 

”அப்பனே, உன் வாழ்க்கையில் கடவுளை கொண்டு வந்தவர் உன் குருதான். அவர் தான் என்னை அடைவதற்கு உரிய வழியைக் காட்டி உனக்கு அருளினார், ஆகையால் அவரையே நீ முதலில் வணங்க வேண்டும், ஆகவே நீ அவரிடம் சென்று அவரின் ஆசியைப் பெறுவாயாக “ என்றார் கடவுள்.

சீடன் மீண்டும் குருவிடம் சென்றான். 

“சீடனே ! நான் தான் கடவுளை அடைய வழி காட்டினேன் என்றாலும், அவர் தான்  அனைத்துக்கும் பொறுப்பானவர், ஆகவே நீ முதலில் கடவுளிடம் ஆசி பெறுவதுதான் சிறந்தது” என்றார் குரு.

மீண்டும் கடவுளிடம் சென்றான் சீடன்

“அப்பனே, அவர் சொல்வது எல்லாம் சரிதான். கடவுள் யார்? குரு என்பவர் யார்? என்று உனக்குச் சொல்ல விரும்புகிறேன். ஒவ்வொருவர் செய்யும் செயலுக்கேற்ற கர்ம வினைகளைப் பொறுத்து எந்த வித பாரபட்சமும் இல்லாமல் நான் மனிதர்களுக்கு சந்தோஷத்தையோ துக்கத்தையோ அளிக்கிறேன். நான் யாருக்கும்  தீமையோ அல்லது நன்மையோ செய்வதில்லை. அவரவர் செய்யும் கர்மபலனைத்தான் அவரவர்களுக்கு வழங்குவேன்.

ஆனால் குரு என்பவர் அப்படியல்ல. அவர் தூய்மையானவர். எளிமையானவர். அன்பானவர். குருவினைத்தேடிச் செல்லும் சீடனை அவர் அப்படியே ஏற்றுக் கொள்கிறார். என்னை அடைய அவனுக்கு வழி காட்டி அருள்வார். அவன் எப்படி இருந்தாலும் அவனை அவர் நெறிப்படுத்தி விடுவார். சீடனின் கர்மபலன் அவனைப் பாதிக்காமல் காப்பார். அவனுடன் கூடவே இருந்து அவனுக்கு வழிகாட்டி அருள்வார். ஆனால் நான் அதைச் செய்வதே இல்லை. ஆகவே கடவுளை விட குருவே உயர்வானவர்” என்றார் கடவுள்.

அன்பு நண்பர்களே! என்னைத் துரத்து துரத்து என்று துரத்திய கர்மவினைகளை தன்னகத்தே பெற்றுக் கொண்டு இன்றைய அமைதியான வாழ்க்கைக்கு காரணம் என் குருநாதர்கள் சற்குரு வெள்ளிங்கிரி ஸ்வாமியும், ஜோதி ஸ்வாமிகள், எனக்கொரு துன்பம் என்றால் உடனடி உதவி என் குருநாதர்களிடமிருந்து உடனடியாக வந்து சேரும். அம்மாவின் மடியில் பாதுகாப்பாய் இருப்பது போன்று உணர்கிறேன்.

எந்த துன்பம் வரினும் அது பற்றிய எந்தக் கவலையும் எனக்கு இருப்பதில்லை. குரு நாதர் இருக்க பயமேன் !

நண்பர்களே, நல்ல குருவை தேடிக்கண்டுபிடியுங்கள். நான் அப்படித்தான் தேடியடைந்தேன்.