குரு வாழ்க ! குருவே துணை !!

Phone : 9600577755 - Email :covaimthangavel@gmail.com

Property Title Clearance with Survey - Contact us

For DTCP/LPA/CMDA Land & Building Plan Approvals, Survey, Construction, Farm Houses, Bulk Land Purchase/Sale

Sunday, October 13, 2013

செவ்வந்திப் பூ

நேற்று இரவு பூண்டி வரை சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது மனையாள் போனில் அழைத்து, ‘பூ மார்க்கெட் வழியாகத்தானே வருவீர்கள், வரும் போது செவ்வந்திப் பூ வாங்கி வாருங்கள், இங்கே முழம் 50 ரூபாய் சொல்கிறார்கள்’ என்றார்.

நானும் நண்பரும் பூ மார்க்கெட் வழியாக வந்த போது நல்ல கூட்டம். சாலையோரங்களில் திடீர் பூக்கடைகளில் கன ஜோராக வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. காரை எங்கும் நிறுத்த இயலவில்லை.

ஒரு வழியாக ஒரு பழக்கடை அருகில் இருந்த திடீர் பூக்கடையின் முன்பு நிறுத்தி, அங்கு நின்று கொண்டிருந்த வயதான பூ வியாபாரியிடம் முழம் என்ன விலை என்று கேட்டேன். 

’இருபது ரூபாய்’ என்றார். 

‘பத்து முழும்’ கொடுங்கள் என்றேன். 

அதன் பிறகு பூ விற்றுக் கொண்டிருந்த பெண்ணிடம் சென்று ’பத்து முழம் எடுங்கள்’ என்று அவர் கேட்ட போது,அப்பெண் ’முழம் முப்பது ரூபாய்’ என்றுச் சொன்னார். 

’அவசரத்தில் இருபது என்றுச் சொல்லி விட்டேனே’ என்று சொல்லியபடி 200 ரூபாயைக் கொண்டு வந்து நீட்டினார். 

’என்ன வியாபாரம் செய்கின்றீர்கள்? சொல்வது ஒரு விலை, வாங்குவது ஒரு விலையா? ‘ எனக் கேட்க, மிகுந்த வருத்தத்தோடு, மீண்டும் ஐம்பது ரூபாயை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து விட்டார். 

அவர் முகம் ஒரு மாதிரியாக இருந்தது. எனக்குள் கொஞ்சம் வருத்தம் இருந்தாலும் வந்து விட்டேன். பூ கொடுத்த பெண்ணும் அவர் சொல்லி விட்டாரே என்பதற்காக கொடுத்து விட்டார். 

வீடு வந்து விட்டேன்.

விடிகாலை எழுந்தேன். மனசுக்குள் பாரமாய் இருந்தது. விறு விறுவென குளித்து விட்டு கிட்டத்தட்ட 13 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த அந்த பூக்கடைக்குச் சென்றேன். 

அப்பெரியவரைக் காணவில்லை. அந்தப் பெண் கனத்த கண்களுடன் பூக்களைக் கோற்றுக் கொண்டிருந்தார். இரவு முழுவதும் விழித்திருந்து வியாபாரம் செய்திருப்பார் போல. அவர் அருகில் சென்று “ஐம்பது ரூபாயை” எடுத்துக் கொடுத்தேன். 

“பூ வேனுமா சார்” என்றார்.

“இல்லையம்மா, நேற்று இரவு காரில் வந்து முழம் இருபது ரூபாய்க்கு வாங்கிச் சென்றேனே, நினைவில் இருக்கிறதா?” என்றேன்.

“சார், நீங்களா சார் அது. ஏதோ அவசரத்தில் சொல்லி விட்டார் சார் அவர், பரவாயில்லை என்று கொடுத்து விட்டேன்” என்றார்.

”அவர் வந்தால் நான் வந்து பணம் கொடுத்துச் சென்றேன் என்றுச் சொல்லம்மா” என்றேன்.

அப்பெண் என்னை உற்றுப்பார்த்தார். அவரின் கண்ணில் கண்ணீர் துளிர்த்தது. அக்கண்ணீர் எனது பாரமான மனதுக்கு இதமாய் இருந்தது. மனசு இலேசாகியது.

எனக்கு அப்பெண் கை நிறைய ”செவ்வந்திப் பூக்களை” எடுத்துக் கொடுத்தார். சிரித்தார். அவர் கொடுத்தப் பூக்களை ஆசையுடன் பெற்றுக் கொண்டு வந்தேன்.

மனசு “பூ” மாதிரி மலர்ந்தது.

* * *