குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, March 6, 2013

சித்த வாழ்க்கை


மனித உயிர்கள் உருவான நாளில் இருந்து இந்த நாள் வரையிலும் கோடானு கோடிபேர் பிறக்கிறார்கள், இறக்கிறார்கள். மனித சமூகம் அத்தனை நபர்களையும் நினைவில் வைத்துக் கொண்டாடியதில்லை. பாரதம் மட்டுமல்ல உலகெங்கும் நன்னெறிகளைப் போதித்தவர்களையும், நல்லவைகளைச்  செய்தவர்களையும், கொடுங்கோலர்களையும் தான் உலகம் மறவாமல் தெரிந்து வைத்துக் கொண்டுள்ளது. ஏன் இப்படி? லோகாயதாய வாழ்க்கை நெறிகளில் பொருள் தேடும் வாழ்க்கையைத்தான் மாயை வாழ்க்கையின் அர்த்தமுள்ளதாக காட்டும். பணமில்லை என்றால் வாழ்க்கையில்லை என்கிறது லோகாயதாய வாழ்க்கை. இந்த வாழ்வின் பின்னால் செல்பவர்களை உலகம் மறந்து விடுகிறது.பொருள் பற்றிய எந்த வித பிரக்ஞையும் இன்றி வாழ்ந்தவர்கள் பின்னால் தான் பொருளைத் தேடி ஓடிக் கொண்டிருப்பவர்கள் நின்று கொண்டிருக்கின்றார்கள். நாட்டை ஆளும் அரசனின் அவையிலே காவி உடை உடுத்தியவருக்குத்தான் முதல் மரியாதை.. அங்கு செல்வத்திற்கு இடமில்லை. அருளுக்கு மட்டுமே இடமுண்டு.

”கையில் ஒரு பைசா பணமில்லை. அதனால் எனக்கு வருத்தமில்லை. ஒரு லட்ச ரூபாய் இருக்கிறது அதனால் எனக்கு மகிழ்ச்சியில்லை. நாளைக்கு எனக்கு பணம் தேவை. ஆனால் என்னிடத்திலோ பைசா இல்லை. அவன் எங்கிருந்தோ பணம் வாங்கிக் கொடுப்பான். அது கடனாகக் கூட இருக்கலாம். அக்கடனைக் அவன் தான் கட்ட வேண்டும். இல்லையென்றால் அந்த அவமானம் அவனுக்குத்தான். இதுதான் சித்த வாழ்க்கை” என்றார்  எனது நண்பர்.

கிட்டத்தட்ட 90 கோடிக்கும் மேல் சொத்து அவருக்கு இருந்தது. வக்கீல் தொழில் செய்து வந்தார். வக்கீல்களுக்கு எப்போதுமே உண்மை பேச முடியாது. உண்மைக்கு எதிராய் தான் இருக்க முடியும். ஏதாவதொரு சந்தர்ப்பத்திலே உண்மை பேசலாம். ஆனால் பெரும்பாலும் உண்மைக்கு எதிராய்த்தான் தொழில் செய்ய முடியும். இப்படியான ஒரு தருணத்தில் இந்த வக்கீலுக்கு “காதறுந்த ஊசியும் வராது கடைக்கே” என்ற வாக்கியம் பட்டினத்தாருக்கு ஞானத்தை விழித்தெழச்செய்தது போல அவருக்கும் உண்மைக்கு எதிரான தொழில் விழிப்பு நிலையைத் தர, வீடு விட்டு குடிசையில் வாழ ஆரம்பித்தார். அங்கும் அவரின் உறவுகள் செல்ல ஆரம்பிக்க, யாரிடமும் சொல்லாமல் எங்கோ சென்று விட்டார். நீண்ட நாட்கள் சென்றன. காசியிலிருந்து வக்கீலின் குடும்பத்தாருக்கு அழைப்பு வர, அங்குச் சென்று  பார்த்தால் ஒரு சாதாரண மனிதன் வாழ அருகதையற்ற ஒரு அறையில் வாழ்ந்து இறையடி சேர்ந்திருக்கிறார் அந்த வக்கீல். கோடி கோடியாய் சொத்து இருந்தும் ஏன் அவர் இப்படியான ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார். மனித வாழ்வின் விடையே அவர்தான்.

மனிதனிடம் இருக்கும் எல்லாமும் அவனிடமிருந்து சென்று விடும். மனிதனுடன் என்றும் இருப்பது அவன் செய்த தர்மம் மட்டுமே.

இன்னும் வரும் .....

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை... அறிய தான் நாளாகும்...

எதுவும் அளவோடு இருந்தால் வாழ்க்கை சுவாரஸ்யம்... குறிப்பிட்ட நண்பருக்கு அளவிற்கு மீறியதால் இந்த நிலைமை...

ப.கந்தசாமி said...

ஊரை விட்டு ஓடித்தான் ஞானத்தைத் தேடவேண்டுமா? சரியான வழியாகத் தெரியலையே?

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.