குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, September 24, 2012

கடவுள் நம்மைக் காப்பாற்றுவாரா?


கோவில்களுக்குச் செல்வது, பூஜைகள் செய்வது, அபிஷேகம் செய்வது, கோவில் பணிகள் செய்வது, தளம் போடுவது, விளக்குகள் வாங்கிக் கொடுப்பது, பூக்கள் வாங்கிக் கொடுப்பது போன்ற இறைப்பணிகளைச்  செய்பவர்களைக் கடவுள் காப்பாற்றுவாரா? 

அவ்வாறு திருப்பணி செய்பவர்கள் எல்லாம் கோடிகளில் அல்லவா மிதக்க வேண்டும்? அப்படி யாரும் இருப்பதாகத் தெரியவில்லையே?. நோய் நொடி இல்லாமல் அல்லவா வாழ வேண்டும். ஆனால் அப்படி யாருக்கு கடவுள் ஆசி வழங்குவதில்லையே? 

அதுமட்டுமா? கடவுளுக்கு நாள்தோறும் பூஜை,புனஸ்காரங்களைச் செய்து வரும் பூஜாரிகளும், ஐயர்களும் கோடீஸ்வரராய் அல்லவா மாறி இருக்க வேண்டும்? இன்றைக்கும் ஐந்து, பத்து தட்டுகளில் விழுகிறதா என்றல்லவா பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் இவர்கள்?  இவர்களுக்கு நோய் நொடி வந்தால் மருத்துவரிடம் அல்லவா செல்கின்றார்கள்? கடவுளுக்கு நாள்தோறும் தொண்டு செய்பவர்களுக்கே இந்த நிலை என்றால் அவ்வப்போது கோவில்களுக்குச் சென்று வருபவர்களின் நிலை பற்றி கேட்கவே வேண்டாம்.

ஏன் கடவுள் வேண்டி நிற்போருக்கு உடனுக்குடன் எதுவும் செய்வதில்லை? கல் மனதாய் இருக்கின்றானே ஏன்? இந்தக் கடவுள் நம்மைக் காப்பாற்றுவானா? இது போல இன்னும் என்னென்னவோ கேள்விகள் இருக்கின்றன. இக் கேள்விகளுக்குப் பதில் தான் என்ன?

மேற்கத்திய கலாச்சாரத்தில் வாழ்பவர்களில் சில நாடுகளில் இருப்போர் மாயா உலகின் உச்சபட்ட இன்ப வாழ்வினை வாழ்கின்றார்கள். அவர்கள் என்றைக்கும் கோவில்களுக்கோ, சர்ச்சுகளுக்கோ செல்வதில்லை. அழகான வீடு, கார், மனைவி, வற்றவே வற்றாத பொருளாதாரம், ஆரோக்கிய வாழ்க்கையை வாழ்கின்றார்கள். கடவுளை தினம் தோறும் வணங்குபவனை விட, கடவுளைப் பற்றி சிந்தித்தே பாராதவர்கள் இன்ப வாழ்வில் திளைக்கின்றார்களே எப்படி?

நமக்கு முன்பு வாழ்ந்து சென்றவர்கள் சில அனுபவங்களைப் பாடல்களாய் பாடி வைத்திருக்கின்றார்கள். அப்பாடலில் இரண்டு பாடலை முதலில் படியுங்கள்.

கோயிலாவது ஏதடா? குளங்க ளாவது ஏதடா? 
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே - சிவவாக்கியர்

மனமது செம்மையானால் மந்திரஞ் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியைக் கட்ட வேண்டா
மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே – அகத்தியர்

மேலே இருக்கும் இரண்டு பாடல்களை ஊன்றி கவனித்துப் படித்துப் பாருங்கள். கடவுளின் தந்திரம் புரியும். 

1 comments:

ப.கந்தசாமி said...

ரசித்தேன்.

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.