குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, May 3, 2012

மோகமுள் திரைப்படமும் நாவலும்




மோகமுள்ளை இன்று தான் வாசித்து முடித்தேன். நிஷ்டையில் இருந்தாட்போல மனது ஒரு முகப்பட்டு இருந்தது. 

ஒரு நாவல் அதுவும் கருப்பு மையிட்ட எழுத்துக்கள் படிக்கும் வாசகனின் மனதை நிஷ்டையில் கொண்டு போய் விடும் என்று உணர முடிந்தது.

படிக்கும் போதே கவட்டிக்குள் குமுற வைக்கும் எழுத்துக்களையும், படங்களையும் பார்த்துப் பார்த்தே மனது இது போன்ற நாவல்களைப் படிக்க முனைய மாட்டேன் என்கிறது.

ஜெயமோகனின் ஏழாம் உலகம் படித்த போது முகத்தில் அறைந்த, நம்மை அடுத்த இன்னொரு உலகத்தினை அறிந்து கொண்ட அதிர்ச்சி என்னை விட்டு நீங்க இரண்டு நாட்களானது. அடுத்து இந்த நாவல் ! 

நாவல் மனதோடு இழைகிறது. காவிரிக்கரை, பாப நாசம், கும்பகோணம், தஞ்சாவூர் கண்ணை விட்டு அகலமாட்டேன் என்கிறது. திரைப்பட படப்பிடிப்பின் போது கும்பகோணம் எல்லையில் ஒரு நாள் ஷூட்டிங் சென்றிருந்த போது காவிரியின் அழகை காண நேர்ந்தது. சுழித்து ஓடும் காவிரியைக் கண்டாலே மனது அவள் மீது லயித்துப் போய் விடும்.

திருவையாறில் சின்னஞ் சிறு வயதில் அப்பாவின் திதிக்குச் சென்றிருந்த போது கரை நிரம்பி தளும்பிச் சென்ற காவிரின் அகண்ட பருவம் இன்றைக்கும் மனதை விட்டு அகலவே இல்லை. விடிகாலைப் பொழுதில் சற்றே குளிர்ந்த தண்ணீரில் முங்கி எழுந்த அனுபவத்தின் சிலிர்ப்பு இந்த எழுத்தை எழுதும் போது கூட உணர முடிகிறது. 

திஜாவின் எழுத்தில் காவிரியின் கரையோர ஊர்கள் கண் முன்னே நர்த்தனமாடுகின்றன. 

ஞானராஜசேகரனின் திரப்பட மோகமுள்ளைப் பார்த்துப் பார்த்து “அர்ச்சனாவை” யமுனாவாக நினைவில் அச்சாய் பதிந்து போய் விட்டது. அர்ச்சனாவின் சாயலை மனதில் இருந்து நீக்க படாத பாடு பட்டேன். ஒரு வழியான அர்ச்சனா மறைந்து போய் யமுனா ஆக்ரமித்து விட்டாள். பாபு கொண்ட காதலைப் போல யமுனாவின் மீதான காதல் இன்னும் இன்னும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

திரை யமுனாவிற்கும், நாவல் யமுனாவிற்கு ஏணி வைத்தால் கூட எட்டவே எட்டாது.வாழைத்தண்டு பாதம் என்பதெல்லாம் திரை “அர்ச்சனாவிடம்” இல்லவே இல்லை. அர்ச்சனா ஒரு விதமான சோகத்தைப் பிழியும் முகம் கொண்டவர். ஆனால் திஜாவின் யமுனா மனித உருவில் இருக்கும் இறைவி போன்றவள்.

பாபு தன்னை விட 10 வயது அதிகமான யமுனாவைக் காதலிப்பது தானே முக்கியமான கரு என்றார் நண்பர். இது சரியும் அல்ல, தவறும் அல்ல, விதி விலக்கு என்றார். பாபுவின் காதல் பொருந்தாக் காதல் என்றார்.

காதலில் பொருந்தாக்காதல் என்று ஏதாவது இருக்கிறதா என்ன? 

சிக்கலான பல முடிச்சுக்களை போட்டுப் போட்டு மனிதன் தனக்குள்ளே பல சிக்கல்களை உருவாக்கி வாழ்க்கையை அபத்தமாக்கி வைத்திருப்பதன் நோக்கம் எனக்கு இது வரை புலப்படவே இல்லை.

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்



2 comments:

இளங்கோ said...

"நீ என்னை மறந்திருப்பேன்னு நெனச்சேன். மோகமுள் முப்பது நாள் குத்தும்.. அதுக்கு அப்புறம் மழுங்கிடும்பாங்க. எட்டின மோகம் மட்டும் இல்லை. எட்டாத மோகமும் அப்படிதான். நீ மாறவே இல்லையா பாபு" - யமுனா.


"பழைய காலத்திலே நெருப்பு பெட்டி கிடையாதாம். அதனால ஒவ்வொரு வீட்லயும் ஒரு குண்டான்ல நெருப்பு போட்டு மூடி வெச்சிருப்பாங்க. மறுநாள் காலமே கொஞ்சம் சுள்ளியும் வராட்டியும் போட்டு விசிறினால் போதும். அப்படி காப்பாத்திட்டு வந்தாங்க அக்கினிய" - என்கிறான் பாபு.

எனக்கு மிகவும் பிடித்த வரிகள் அண்ணா இது.

Thangavel Manickam said...

நாவலின் உச்சக்கட்ட நிகழ்வின் வார்த்தைகள் அல்லவா இது. அக்னி உள்ளுக்குள் எரியா அக்னி இல்லையென்றால் அவன் மனிதனே இல்லை.

எனக்கென்னவோ யமுனா பாபுவின் காதலை சோதித்து இருக்கிறாள் என்றே தோன்றுகிறது. கடைசி வரை யமுனா பாபுவிடம் வேறொரு பெண்ணாகப் பார்த்து திருமணம் செய்து கொள் என்று கேட்கிறாள். ஆனால் பாபுவோ அதையெல்லாம் மறுக்கிறான். நீதான் வேண்டும் என்கிறான்.

ஞான ராஜசேகரனின் மோகமுள் திரைப்படம் ஒரு அபத்தம் என்பது என் முடிவு. நாவலுக்கும் படத்திற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை பெயரைத் தவிர.

காமம் இல்லையென்றால் மனித வாழ்வில் இன்பம் ஏது. யமுனா, பாபு காதல் வாழ்க்கையின் ஸ்ருதி.

கமெண்டுக்கு நன்றி பிரதர்.

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.