குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, September 7, 2011

பொறுப்பின்மையின் பிரச்சினைகள்

இன்று காலையில் வீட்டிற்கு எதிரே இருக்கும் மின்சார போஸ்ட்டில் லாரி ஒன்று இடிக்க நெருப்பு பொறிகள் பறந்து வீட்டில் இயங்கிக் கொண்டிருந்த ஃப்ரிட்ஜ், விளக்குகள் எல்லாம் டப் டப் என்றன. வெளியில் நின்றிருந்த பையன் அலறியடித்துக் கொண்டு ஓடி வந்தான்.

18 அடி அகலமே இருக்கும் சாலையில் பெரிய லாரி ஒன்று சரக்குகளை ஏற்றிக் கொண்டு வருகிறது. அதுவும் தொங்கிக் கொண்டிருக்கும் மின்சார வயர்களை தெரிந்தே அறுத்துக் கொண்டு போகிறது அந்த லாரி. அதைப் பற்றிக் கொஞ்சம் கூட கவலைப்படாமல் லாரி டிரைவர் வண்டி ஓட்டுகிறார். அருகிலிருந்த டிரான்ஸ்பார்மர் வெடிக்கிறது. வெடிச்சத்தம் கேட்டு பலரும் வந்து பார்க்கின்றனர். 

கடையின் மேனேஜர் எனக்கு ஒன்றும் தெரியாது என்கிறார். ஒரு மணி நேரம் பவர் கட். திரும்ப லைன் மேன் வந்து சரி செய்கிறார். அடுத்த ஒரு மணி நேரத்திற்கு லைன் விட்டு விட்டு வருகிறது. மீண்டும் மின்சாரம் கட் செய்யப்படுகிறது. மீண்டும் லைன் மேன் வந்து சரி செய்கிறார்.

தனிப்பட்ட ஒருவரால் கிட்டத்தட்ட 100 வீடுகளுக்கான கரண்ட் கட் செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பல்புகள் வெடிக்கின்றன. யாரிடம் கேட்பது? யாரிடம் கம்ப்ளெயிண்ட் சொல்வது? 

தமிழக மக்களிடம் ஒரு வித எதேச்சையதிகாரம் கொடிகட்டிப் பறக்கிறது. நான்கு பேர் ஒன்று சேர்ந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற போக்கு தெரிகிறது. சமீபகாலமாக கல்லூரிகளில் நடக்கும் கொலை, அடிதடி சம்பவங்களைப் பார்க்கும் போது ஏன் இப்படியான மன நிலை மாணவர்களுக்கு ஏற்படுகிறது என்று அனைவருக்கும் புரிகிறது.சமூகத்தின் பெரும் தாக்கத்தினை உருவாக்கும் சினிமாவில் வன்முறை வரைமுறை இன்றி காட்டப்படுவதை மாணவர்கள் தங்களுக்குள் ஈர்த்துக் கொள்கின்றனர். பெரும் ஹீரோக்கள் கொஞ்சம் கூட சமூகத்தின் பால் அக்கறையின்றி அம்மாதிரியான காட்சிகளில் நடிக்கின்றனர். இப்படியான படங்கள் விதைக்கும் விதையானது மக்களின் மனதில் ஒருவித ஹீரோயிசத்தை வளர்க்கிறது. மிகப் பெரும் சமுதாயச் சீர்கேடு இது. இது ஒன்று மட்டும் காரணமல்ல. இன்னும் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

சமூகத்தில் உயர் பதவியில் இருப்பவர்களும், சமூகவாதிகளும் இப்பிரச்சினையை களைய முற்பட வேண்டும். கொஞ்ச நாட்கள் முன்பு வேலையாக வெளியில் சென்ற போது, பனிரெண்டு வயசுப் பையன் குவார்ட்டர் போட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். கையில் சிகரெட் புகைந்து கொண்டிருந்தது. இன்னும் கொஞ்ச தூரம் தாண்டிச் செல்லுகையில் வயதான பெண்மணி ஒருவர் சாக்கடையின் அருகில் குவார்ட்டர் குடித்துக் கொண்டிருந்தார். தண்ணி போடுவது ஹீரோயிசத்தின் அடையாளமாய் மீடியாக்கள் உருவகப்படுத்தி வருகின்றன.

சமூகத்தின் மீதான பிரக்ஞை, எதிர்கால சந்ததியினர் மீதான அக்கறை எதுவும் இன்றைய நவ நாகரீக கால மனிதர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் இல்லாமல் போவது நல்லதல்ல. மாவட்டம் தோறும் அனாதை விடுதிகளும், முதியோர் விடுதிகளும் உருவாவதன் காரணம் சமூகத்தின் மீதான அக்கறை குறைவதால் தான்.

மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் கடமை இருக்கிறது. நமக்குத் தேவையான வசதிகளைத் தர சட்டத்தின் ஆட்சியும், நிர்வாகமும் இருக்கிறது. அதையெல்லாம் மனிதர்கள் மீற நினைக்கின்றார்கள். அதன் பிரதிபலன் மிகக் கொடுமையாய் அல்லவா கிடைக்கும்? மீடியாவில் பிக் பி என்றழைத்த அமர்சிங் கடைசியில் கிட்னி பெயிலாகி பெரும் பிரச்சினையில் மாட்டி, ஜெயிலுக்குச் செல்கிறார். ஓய்வெடுக்க வேண்டிய வயதில், சிறைக்குச் செல்லும்படி “விதி” விளையாடுகிறது. செய்த வினை வாசல் கதவை தட்டியே தீரும் என்பதற்கு இன்றைய உதாரணத்திற்கு அமர்சிங்கைத் தவிர வேறு யாரைக் காட்ட முடியும்?

சமூகப் பிராணியான மனிதன் சமூகத்தின் பால் அக்கறையும், பிடிப்பும் வைத்திருக்க வேண்டும். அது அவசியம் கூட. 

* * *

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.