குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, August 4, 2010

அன்றும் இன்றும்


பத்தாவது படித்துக் கொண்டிருந்த போது எனது தோழனும், எங்கள் வீட்டு விவசாய வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்த சந்திர போஸுக்கு கல்யாணம் பேசிக் கொண்டிருந்தார்கள். பெண் பார்த்து அனைவருக்கும் பிடித்து விட்டது. வீட்டு வாசலில் மாமா, தாத்தா, அம்மா, அக்கா, போஸ் அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர். நான் அவனிடம் சொன்னேன். போஸு கல்யாணம் முடித்தவுடன் உன் பொண்டாட்டியை கொண்டு வந்து இங்கே விட்டு விட்டு வீட்டுக்குப் போயிடு என்று அவனைக் கலாட்டா செய்தேன். அவனும் சரிடா என்று சொல்லி விட்டான்.

கொஞ்ச நாட்களில் திருமணம் முடிந்து வீட்டுக்கு வந்தான். நான் வாசலில் சேரில் அமர்ந்திருந்தேன். அனைவரிடமும் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு என் அருகில் வந்தனர்.

வந்தவன், தங்கம், நான் கிளம்புறேண்டா, அண்ணி கையை பிடித்து என் கையில் கொடுத்து, நீயே பாத்துக்க என்று சொல்ல வெட்கத்தில் நெளிய ஆரம்பித்தேன். சுற்றி இருந்தவர்கள் அனைவரும் சிரி சிரி என சிரிக்க ஆரம்பித்தனர். அண்ணியோ ஒரு படி மேலே போய் என்னங்க, ஒன்னும் பேச மாட்டேங்குறீங்க என்று சொல்ல வெட்கத்தில் எனக்கு ஒரு மாதிரியாகி விட்டது.

அன்றைக்கு சரியான கலாட்டா.

இருபத்து ஐந்து வருடங்களுக்கு மேல் ஓடி விட்டன. போஸின் பையன் இஞ்சினியரிங் படிக்கப் போகிறான். பெண்ணும் படித்துக் கொண்டிருக்கிறாள். எனக்கு திடீரென்று பலா பிஞ்சு சாப்பிடனும் போல இருக்க, அவனுக்கு போன் போட்டேன். அண்ணி வாய்ஸ் கேட்டது. என் குரல் கேட்டவுடன் அடையாளம் தெரியாமல் போஸிடம் கொடுத்து விட்டார்கள்.

டேய் போனைக் அங்கே கொடுடா என்றேன். அண்ணி வாங்கிப் பேசினார்கள்.

என்ன அண்ணி, அப்படியே தான் இருக்கின்றீர்களா? இல்லை வயதாகி விட்டதா என்றேன். ஏன் நீங்களே வந்து பாருங்களேன் என்றார். நீங்க அப்படியே இருந்தா, வந்து கூட்டிக்கிட்டு வருகிறேன். என்னுடன் வருகின்றீர்களா என்றேன். அவரும் உடனே கிளம்புன்னு சொல்லுவாரு, நீங்க வாங்க உங்க கூட வந்துடுறேன் என்றார். சிரி சிரியென்று சிரித்தேன்.

அருகில் அமர்ந்திருந்த என் மனைவி, உங்களுக்கு ரொம்பவும் தைரியம் தான் என்றாள். அவ்ளுக்கு எங்கே தெரியப்போகிறது எங்களைப் பற்றி?

போஸிடம் பலா மோசு அனுப்பி வை என்றுச் சொன்னேன். இப்போ எங்கேடா போறது என்றான். அம்மாகிட்டே சொன்னேன், அவங்க உன்னிடம் சொல்லச் சொன்னாங்க, சொல்லிட்டேன் என்றேன். எங்காவது பிடித்து அனுப்பி வைப்பான்.

எனது உயிரோடு கலந்து, என்னோடு வாழ்ந்து கொண்டிருக்கும் போஸ் அடுத்த பிறவியில் எனக்கு மகனாகப் பிறக்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டேன்.

* * * * *

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.