குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, July 17, 2009

அப்பாவுடன் அம்முவின் போராட்டம்.......


படித்துக் கொண்டிருப்பேன். கையில் உருளை சிப்ஸ் பாக்கெட்டை வைத்துக் கொண்டு என் தலையருகில் அமர்ந்து கொண்டு கையில் எடுத்த சிப்ஸை வாயில் வைத்து கடித்து விட்டு மீதியை ”அப்பா, ம்.. ”என்று சொல்லி என் வாயில் வைக்கும் அம்மு. நானும் சாப்பிடுவேன். அப்படியே ஒரு பாக்கெட்டையும் காலி பண்ணுவோம் அம்முவும் நானும். இது வழக்கமாக அம்முவுடன் நானும் சேர்ந்து கொண்டு செய்யும் வேலை.

இன்று, ஹோமியோபதி டாக்டரை பார்த்து விட்டு வரும் போது வாங்கி வந்த காராச்சேவைக் கொண்டு வந்து காட்டியது அம்மு. வேலைப் பார்த்துக் கொண்டிருந்ததால் அப்புறம் சாப்பிடலாம் அம்மு என்று சொல்லி விட்டேன்.

மாலை நேரம். டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது காராசேவு நினைவுக்கு வர ”அம்மு, காராச்சேவை எடுத்துக்கிட்டு வாரியா, சாப்பிடலாம்”என்றேன். ”அப்பா, அப்போதே சாப்பிட்டு விட்டேனே” என்றது அம்மு. ”அப்படியாம்மா” என்று சொல்லிபடி டிவியில் மூழ்கி விட்டேன்.

ரித்திக் பள்ளியில் இருந்து வந்ததும் சேவை சாப்பிட்டுக் கொண்டிருந்தான். ”ஏதுடா இது?” என்றேன்.

”கிச்சனில் இருந்ததுப்பா” என்று ரித்திக் சொல்ல எனக்கு கோபம் வந்து விட்டது. ”அம்மு இனிமேல் என்னிடம் பேசாதே” என்று சொல்லி கோபத்துடன் மனைவியிடம் ”உன் மகளை என்னிடம் பேசக்கூடாது என்று சொல்லு” என்று கோபமாக கத்தினேன்.

அவ்வளவுதான். உடனே அம்மு அருகில் வந்து மூக்கை முகத்தில் வைத்து தேய்த்தது. நான் தள்ளி விட்டேன். முத்தம் கொடுத்தது. முகத்தை திருப்பிக் கொண்டேன். மேலே ஏறி உட்கார முனைந்தது. ”என்னிடம் வராதே” என்று கோபத்தில் இறைந்தேன். பயந்து விட்டது. அம்முவின் அம்மாவிடம் ”ஏய் அம்முவிடம் சொல்லி என்கிட்டே வரக்கூடாது என்று சொல்” என்று கத்தினேன்.

கையில் சாப்பாட்டைத் தட்டைக் கொண்டு வந்து அருகில் அமர்ந்து ”அப்பா ஊட்டி விடு” என்றது. நான் வேறுபக்கம் திரும்பிக் கொண்டேன். அப்போது பார்த்து, நண்பரிடமிருந்து போன் வர, மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தேன்.

என்னிடம் பேசக்கூடாது என்றும், நான் மட்டும் தான் அப்பாவிடம் பேசுவேன் என்றும், நீ அப்பாவுடன் பேசாதே என்றும் சண்டை போட அம்மாவுக்கும் அம்முவுக்கும் தகராறு வந்து விட்டது. என்ன சொல்லியும் நான் கேட்கவில்லை என்றவுடன் ”அப்பா, கால் வலிக்குது, வலிக்குது” என்று அழ ஆரம்பித்தது. நானொன்றும் சொல்லவில்லை என்பதால் எழுந்து போய் அம்மாவிடம் மீண்டும் சண்டை போட , மனைவி என்னிடம் வந்து ”ஏங்க இப்படிச் செய்றீங்க?” என்று கேட்க, நான் காராச்சேவு பிரச்சினையைச் சொல்ல சிரி சிரியென்று சிரித்தாள். அம்மு மறந்து விட்டது என்றும் அதனால்தான் முடிந்து விட்டது என்று சொல்லி இருக்கிறது என்றும் சொல்ல எனக்கு ஒரு மாதிரியாக ஆகிவிட்டது.

உடனே இருவரும் ராசியாகி விட்டோம். ஒரு வழியாக அம்முவின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

வாழ்க்கையின் சுவாரசியமான தருணங்கள் இவைதான். மனித குலம் இப்படிப் பட்ட சந்தோஷங்களினால் தான் இன்றும் ஏதோ நம்பிக்கையுடன் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறது.

குழந்தைகள் வாழ்க்கையினை அர்த்தப் படுத்தும் அற்புதங்கள் என்பதை இந்த அற்புதமான தருணத்தில் மீண்டும் உணர்ந்தேன்.

1 comments:

விவேகானந்தன் said...

Its too nice..! really I feel that feelings..!Take care about ammu..!

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.