குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, May 14, 2009

ஹோட்டலும் நானும் !

மனைவியும் குழந்தைகளும் ஊருக்குச் சென்றிருந்த காரணத்தால், முதல் மூன்று நாட்களுக்கு ஹோட்டலில் இருந்து சாப்பாடு வந்தது. மூன்றாம் நாள் இரவு கடுமையான காய்ச்சல் வந்து விட்டது. வயிற்று வலி உயிரை வதைத்தது. காரணம் தெரியாமல் வழக்கம் போல ஒரு நாள் உபவாசம் இருந்தேன். மறு நாள் காய்ச்சலும் நின்று விட்டது, வயிற்று வலியும் நின்று விட்டது. ஹோட்டல் சாப்பாட்டில் பிரச்சினை என்று கண்டுபிடித்தேன். உண்மை என்னவாகவிருக்குமென்று அறியும் ஆர்வத்தில் எனக்கு சாப்பாடு வந்த ஹோட்டலின் சர்வரைப் பிடித்து ரகசியமாய் விசாரிக்க சாப்பாட்டில் அவர்கள் செய்யும் கோல்மால் தெரிய வர அதிர்ந்து போய் விட்டேன். இவ்வளவுக்கும் சாப்பாட்டின் விலை 35 ரூபாய்.

இனிமேல் ஹோட்டலை நம்பினால் சுடுகாட்டிற்கு வழியைக் காண்பித்து விடுவார்கள் என்ற காரணத்தால் சமையலை ஆரம்பித்தேன். பத்து நாட்கள் கடந்தன. வேலையில் ஈடுபடும் போது சாப்பாட்டை மறந்து விடுவது வாடிக்கையாய் விட்ட காரணத்தால் ஒரு நாள் இரவு ஹோட்டலில் டிஃபன் சாப்பிடலாமென்று முடிவெடுத்து சிறிய தோசை ஒன்றும், மூன்று இட்லியும் வாங்கி வந்து இரவு சாப்பிட்டு விட்டு படுத்து விட்டேன். விடிகாலை உடலில் ஏதோ பிரச்சினை என்பது போல தெரிய, எழுந்து உட்கார்ந்தேன். விடிகாலைக் குளிரிலும் வியர்க்க ஆரம்பித்தது. மயக்கம் வருவது போல இருக்க, வயிற்றில் வலியும் வந்தது. புரிந்து கொண்டேன். வாய்க்குள் விரலை வைத்து நேற்று இரவு சாப்பிட்ட மூன்று இட்லி, தோசையை வாமிட் செய்த அடுத்த நொடி உடல் பழைய படியானது.

ரியாலிட்டி ஆஃப் பயோடெரரிசம் என்ற கட்டுரைக்கு ஆதாரம் சேர்க்கும் பொருட்டு எனது ஹோட்டல் அனுபவங்களைப் எழுத வேண்டிய கட்டாயமேற்பட்டு விட்டது. கோவையின் மிகப் பிரபலமான கடையில் விற்கும் அமெரிக்கன் சுவீட் கார்னைச் சாப்பிட்டால் இரண்டு நாட்களுக்கு வாயில் உணர்ச்சியே வராது. என்ன காரணமென்று இதுவரைக் கண்டு பிடிக்க முடியவில்லை.

மனிதர்கள் ஹோட்டல்காரர்களின் மீது நம்பிக்கை வைத்துத் தான் சாப்பிடச் செல்கிறார்கள். ஆனால் சில ஹோட்டலில் சமைக்கப்படும் உணவுப் பொருட்கள் மனிதர்களின் உயிருக்கு உலை வைத்து விடுகின்றன.

மேலும் பஸ் ஸ்டாண்ட் அருகிலோ, சாலை அருகிலோ மணமணக்கும் வடை, பஜ்ஜிகளை சுட்டு விற்றுக் கொண்டிருப்பார்கள். எச்சில், கோழை துப்பி காய்ந்து போன சாலையில் வாகனங்கள் செல்லுவதால் ஏற்படும் தூசி மேற்படி பதார்த்தங்களின் மீது படிந்து விடுகின்றன. எமன் வடையோ அல்லது பஜ்ஜி வடிவிலோ வருவதைக் கூட அறியாமல் டீயுடன் எமனையும் உள்ளே தள்ளிக் கொண்டிருப்பார்கள் மனிதர்கள்.

ஜாக்கிரதை நண்பர்களே...

வெளியூர் சென்றால் பழங்களோ அல்லது நல்ல டிபார்ட்மென்ட் ஸ்டோரில் வாங்கிய பிஸ்கட்டுகளையோ உடன் எடுத்துச் செல்லுங்கள். காசு செலவானாலும் பரவாயில்லை என்று தரமான ஹோட்டலில் உணவருந்துங்கள். காசைக் கொடுத்து வினையை வாங்க வேண்டாம். என் அனுபவத்தில் சொல்கிறேன்....

5 comments:

sarathy said...

நல்ல பயனுள்ள செய்தி....

தொடருங்கள்....

அமர பாரதி said...

உண்மைதான் தங்கவேல். பெரிய கடைகளிலும் இந்த பிரச்சினை உள்ளது. நீங்கள்தான் சாரு ஆன்லைன் வெப் மாஸ்ட்டராக இருந்த தங்கவேல் மானிக்கமா?

வெங்கடேஷ் said...

பயனுள்ள பதிவு!! அதனால் இதை திரட்டி.காம் தளத்தின் பரித்துரை பக்கத்தில் இணைத்துள்ளேன்

வெங்கடேஷ்
thiratti.com

Anonymous said...

Hello Sir,

What golmal in the food?

Please specify the true thing what he said..It will be usefull for others also......

Thangavel Manickam said...

அனானிமஸ் : சாதம் வேகவைக்கும் போது சுண்ணாம்பு சிறிதும், சோடா உப்பும் பயன்படுத்துகிறார்களாம் சில ஹோட்டல்களில்.

வெங்கடேஷ் : நன்றி வெங்கடேஷ்.

அமரபாரதி : ஆமாம் அமர். சாரு ஆன்லைன் நிர்வாகியாக இருந்தேன். வேலைப் பளு காரணமாக தற்போது வேறோருவர் நிர்வகிக்கின்றார்.

சாரதி : உணவையே மருந்தாக உட்கொள்ளும் பக்குவம் வந்தால் மருத்துவமனையை நாட வேண்டியதில்லை.

உதாரணமாக நான்கு பேர் இருக்கும் குடும்பத்தில் அரைக் கிலோ மட்டன் இரு வேளைக்கு சாப்பிட்டோம் என்றால் சாகும் வரைக்கும் மட்டன் சாப்பிடலாம் என்று எனது அண்ணன் அடிக்கடி சொல்லுவார். கொலஸ்ட்ரால், பிபி எல்லாம் அண்டவே அண்டாது. மேலும் உண்ணும் உணவினை மருந்தாக்கி விட வேண்டும். அதன் பக்குவம் தெரிந்து வைத்துக் கொண்டால் ஆரோக்கியமான உடலும், மனமும் தானாகவே வந்து விடும். முயற்சி செய்யுங்கள்.

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.