குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, April 18, 2009

தலைவன் என்கிறவன் யார் ?

தினசரி பேப்பரை பிரிண்ட் செய்து தலையில் தூக்கிச் சென்று விற்றவர் முதலாளியானார். ஊறுகாய் போட்டு கைகள் கடுக்க தெருத் தெருவாய் தூக்கிச் சென்று விற்றவர் முதலாளியானார். டேபிள் துடைத்தவரின் தொழில் சாம்ராஜ்ஜியம் இன்று இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஹோட்டலில் தங்க உனக்கு அனுமதி கிடையாது என்று கேவலப்படுத்தியதால் ஐந்து நட்சத்திர ஹோட்டல் இந்தியாவின் முகவரியானது. இப்படி கேலிக்கும், அவமானத்திற்கு உட்பட்ட எத்தனையோ உள்ளங்கள் தொழில் சாம்ராஜ்ஜியத்தின் அதிபதிகளாய் வலம் வருகிறார்கள்.

அவ்வாறு முன்னேறியவர்களின் வாழ்வில் சோர்வும், அசதியும் ஏற்பட்டிருக்கும். அந்தச் சமயத்தில் என்ன செய்திருப்பார்கள் ? இதோ கீழே சில வரிகள். குறிக்கோளை நோக்கிய பயணத்தில் இச்சில வரிகள் உத்வேகத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.

உழைப்பு என்பது விழலுக்கு இறைத்த நீராய் செல்லாமல் வயற்காடுகளில் கிணற்றிலிருந்து இறைக்கப்படும் தண்ணீர் வாய்க்கால் வழியாக சிந்தாமல் சிதறாமல் எவ்வாறு பாத்திக்குள் சென்று சேர்கிறதோ அதைப் போல இருக்க வேண்டும். எதை நோக்கிய பயணம் என்ற முடிவு முதலில் எடுக்கப்படல் வேண்டும். பயணத்தில் ஆங்காங்கே தடங்கல்கள் ஏற்படும் போது மனம் துவண்டு சோர்வடையக்கூடாது. புறப்பட்டாகி விட்டது. இனி நிற்க முடியாது. இதோ இன்னும் கொஞ்சம் தூரம் தான் இருக்கிறது. எந்த இடத்தைச் சென்று சேர வேண்டுமோ அந்த இடம் இதோ இன்னும் சில அடிகளில் தான் இருக்கிறது. துவண்ட கால்களை உதறி எழ வேண்டும். மூச்சை உள்ளே ஆழமாக இழுத்து உடம்பை உதறி உத்வேகம் கொள்ள வேண்டும். ரத்தம் சூடாக உடலெங்கும் பாயும். நெஞ்சுக்குள் குறிக்கோள் தகிக்க தகிக்க, கண்களில் தீப்பொறி பறக்க பறக்க, விடாது முன்னேற வேண்டும்.

தங்கச் சுரங்கத்தை தேடி தோண்டியவர் சோர்வுற்று வெறுப்பாக சென்று விட்டார். அதைத் தொடர்ந்து அங்கு வந்த வேறொருவர் இரண்டு அடி தோண்டினார். கண்ணெதிரே தங்கப்பாளங்கள் பளபளத்தன என்ற உண்மைக் கதை சோர்வுக்கு துணையாக வரட்டும். இன்னும் இரண்டடி தோண்டியிருந்தால் தங்கப்புதையல் கிடைத்திருக்கும். சோர்வும், அசதியும் வெற்றியின் நேர் பகைவர்கள். அவர்களை விரட்டி அடி. தூர தூர... விரட்டி அடி.. வந்து விட்டது அதோ பார்... வெற்றி உன்னைத் தேடி வந்து விட்டது. அதற்கு நீ இன்னும் சில அடிகள் எடுத்து வைக்க வேண்டும். விடாதே... விடாதே... வெற்றி நிச்சயம்.

அடுத்ததாக தலைவன் என்பவனின் இயல்பு பற்றிய ஒரு சிறு விளக்கம் தருகிறேன்.

தலைவன் என்பவன் யார் தெரியுமா ? “ இலட்சியத்தை, குறிக்கோளை மேலாண்மை செய்கிறவன்” . குறிக்கோளை அடைந்து விட்ட பிறகு அதை மேலாண்மை செய்யப்பழகிக் கொண்டவர் நாளை உலகை ஆளப்போகும் தலைவன். மேலாண்மை என்ற சொல்லில் அனேக அர்த்தங்கள் புதைந்து கிடக்கின்றன. அது என்ன ? விரைவில்....

2 comments:

இராகவன் நைஜிரியா said...

//“ இலட்சியத்தை, குறிக்கோளை மேலாண்மை செய்கிறவன்” //

சரியாகச் சொல்லியிருக்கீன்றீர்கள். அருமையான இடுகை. வாழ்த்துகள்.

baskar said...

சோர்வாக உணரும் போது படிக்க வேண்டிய பதிவு.

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.