குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, May 12, 2008

மகனுக்கு கடிதம் - 2 ( 12.05.2008)

ரித்தி, எப்போ பார்த்தாலும் விளையாட்டு, கார்ட்டூன் சானல் தான் பார்த்துக் கொண்டிருக்கிறாய். எனக்கு கோபமாக வருகிறது. சத்தம் போட்டால் முகத்தை அப்படி ஒரு பாவமாய் வைத்துக் கொண்டு விடுகிறாய். அதிலுமின்றி ஒரு சிரிப்பு வேறு. அப்படியே கோபத்தை குறைத்து விடுவாய் நீ.....







நேற்று கராத்தே மாஸ்டரின் உதவியாளர் உன்னை ரொம்பவும் தான் பாரட்டி விட்டார். ” பேசவே மாட்டேன் என்கிறான் “ ரித்தி என்றார்
மேலும்
“ எதற்கெடுத்தாலும் சிரிப்புதான், போதும் என்று சொல்லி பயிற்சியினை நிறுத்தினான்” என்றார்.
” நல்லா வளர்த்து இருக்கீங்க சார்” என்று எனக்கு வேறு பாராட்டு. இருந்தாலும் நீ இன்னும் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று எனக்கு ஆவல்.

நல்ல பெயர் என்றால் இப்படி இல்லை மகனே ! கீழே படி உனக்கு புரியும் என்று நினைக்கிறேன்.

பூவுலகில் ஒரு நேரத்துக்கு கூட உணவில்லாமல் இருக்கும் எத்தனையோ உன்னுடைய சகோதரர்கள் சகோதரிகள் செத்து கொண்டு இருக்கின்றார்கள். உன் சகோதரிகள் உடுத்த உடையின்றி இருக்க இடமின்றி அல்லாடுகின்றனர். மருத்துவ வசதிகள் இன்றி அனு தினமும் உயிரை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

உன் பாட்டிகளும், தாத்தாக்களும் ஆதரவின்றி நிராதரவாய் நிற்கின்றனர். அவர்களை காப்பாற்றுவாயா என் அன்பு மகனே...

உனக்கு பசி எடுத்தால் ஊட்டி விட உன் அம்மா ஓடோடி வருவாளே, அது போல நீயும் உன் சகோதர சகோதரிகளுக்கு உணவிட்டு வளர்ப்பாயா ? நல்ல துணிகளை வாங்கி கொடுத்தும் அவர்களுக்கு இருக்க இடமும், நல்ல உணவும், மருத்துவ வசதியும் செய்து கொடுத்து அவர்களை மகிழ்ச்சியாக வைத்து கொள்வாயா ?

உன் சகோதரி அம்முக்குட்டி அழுதால் துடித்துப் போவாயே, அது உனக்கு நினைவில் இருக்கிறதா ?

பாவமில்லையா பக்கத்து வீட்டு பாப்பாவும் தம்பியும்... அவனையும் அப்படி கவனித்துக் கொள்வாய் தானே.... நீ சாப்பிடும் போது எல்லோரும் சாப்பிட்டு இருப்பார்களா என்று ஒரு துளியாவது நினைத்துப் பார்ப்பாயா ? இப்போதைக்கு இது போதும் மகனே...